அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இரு வேட்பாளர்களில் எவருக்கும் சாதகமான நிலை இருக்காது எனக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் சில முக்கிய மாநிலங்களிலும் தேசிய அளவிலும், துணை அதிபர் கமலா ஹாரிசுக்கும் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையே இடைவெளி மிகக் குறுகியதாக இருக்கும் எனக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுவதால் நாட்டின் அரசியல் எதிர்காலம் பல சிக்கலை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கருத்துக்கணிப்புகள் இரு கட்சி ஆதரவாளர்களிடமும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒவ்வொரு வாக்கும் மிகவும் முக்கியமான வாக்காக மாறியுள்ளது.
நவம்பர் 5ம் தேதி தேர்தல் முடிந்ததும் கூட இரு வேட்பாளர்களில் யார் வெற்றிபெற்றவர் என்பது அவ்வளவு எளிதாக தெரிந்து விடாது என்ற கருத்தும் நிலவி வருகிறது.
தேர்தல் முடிவை எதிர்த்து முறையிட சட்ட ரீதியான போராட்டங்கள் ஏற்படலாம் எனப் பெரும்பாலானோர் கருதுகின்றனர்.
மேலும், டிரம்ப் தோற்றால் அவரின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடுக்கூடிய மோசமான நிலை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
உலக அரங்கில் அமெரிக்கா எதிர்நோக்கி உள்ள பிரச்சனைகளை விட நாடு “தவறான திசையில்” செல்வதற்கான சூழ்நிலை அதிகரித்து வருவதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே, பேச்சு சுதந்திரம் மற்றும் துப்பாக்கி உரிமைகளை ஊக்குவிக்கும் தனது இணைய மனுவில் கையெழுத்திடுபவர்களுக்கு, நவம்பரில் நடைபெறும் அதிபர் தேர்தல் வரை குலுக்கல் முறையில் தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 8.4 கோடி) வழங்க உலகின் முன்னணி பணக்காரர் எலன் மஸ்க் முன்வந்துள்ளார்.
டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே அதிக போட்டி நிலவும் பெனிசில்வேனியா மற்றும் ஜார்ஜியா மாகாண வாக்காளர்களுக்கு மட்டும் இந்த ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டிருக்கும் எலன் மஸ்க் தனது இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தும் விதமாக டிரம்ப்-புக்கு ஆதரவாக பெனிசில்வேனியா-வில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் காசோலையை வழங்கி ஆச்சரியப்படுத்தினார்.
ஏற்கனவே இந்த இணைய மனுவை கையெழுத்திடும் ஒவ்வொருவருக்கும் 47 அமெரிக்க டாலர் வழங்குவதாக உறுதியளித்துள்ள எலன் மஸ்க் தற்போது ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளது அம்மாகாண மக்களுக்கு லாட்டரி அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எலன் மஸ்க்-கின் இந்த அறிவிப்பு அமெரிக்க தேர்தல் விதிகளுக்கு புறம்பானது என்று கூறிவரும் எதிர்க்கட்சியினர் மஸ்க் மீது சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகின்றனர்.
அதேவேளையில், இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றால் இதுவே அமெரிக்காவின் “கடைசித் தேர்தலாக இருக்கும்” என்று சனிக்கிழமையன்று டிரம்ப்-புக்கு ஆதரவாக பென்சில்வேனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் எலன் மஸ்க் பேசினார் ஆனால் டிரம்ப் ஜெயித்தால் நாடும் உலகமும் என்னவாகும் என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை.
எலன் மஸ்கின் இந்த பேச்சு அமெரிக்காவில் மட்டுமன்றி உலக அரங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு பெருமுதலாளிகளின் கையில் சிக்கி ஜனநாயகம் கேலிக்கூத்தாகி வருவதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.