திருச்சி நெடுஞ்சாலை விரைவில் அதிவேக எட்டு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இதன்மூலம் சென்னை – திருச்சி இடையேயான பயண நேரம் நான்கு மணிநேரமாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மிக முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக உள்ளது.

திருச்சியில் இருந்து மதுரை, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுக்கு எளிதாக செல்ல முடியும் என்பதால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது.

இதனால் சாதாரண நாட்களிலேயே இந்த சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்படுவதோடு விபத்துக்கு வழிவகுக்கிறது.

இதையடுத்து, இந்த நெடுஞ்சாலையை கிரீன் பீல்டு எக்ஸ்பிரஸ் வே எனப்படும் அதிவேக நெடுஞ்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) திட்டமிட்டுள்ளது.

இதனால் தற்போது 6 மணி நேரமாக உள்ள சென்னை – திருச்சி இடையிலான பயண நேரம் 4 மணி நேரமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எட்டு வழிச்சாலையை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.

சாலை வளைவுகள், அதிக விபத்து ஏற்படும் பகுதிகள், கூடுதல் மேம்பாலங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

மிக விரைவில் இதற்கான திட்ட அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிகிறது. வரும் 2025ஆம் ஆண்டு மத்தியில் இத்திட்டத்துக்கான அடுத்தகட்ட பணிகள் துவங்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.