நெல்லை : தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை மு.க.ஸ்டாலின் அவரது மகனை துணை முதலமைச்சராக்கியது தான் என கடுமையாக விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க., இரண்டாகி விட்டது, மூன்றாகி விட்டது என தி.மு.க.வினர் கபட நாடகம் நடத்துகின்றனர். அ.தி.மு.க. எப்போதும் ஒன்றாகத்தான் உள்ளது. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என ஆவேசமாக பேசினார்.
அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட அதிமுக சார்பில் கட்சி கொடியேற்றுதல், பொதுக்கூட்டங்கள் எனபல நிகழ்ச்சகிள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடந்தது. புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமிக்கு, ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி செங்கோலை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார். தொடர்ந்து வீரவாள் பரிசு வழங்கப்பட்டது. தையல் எந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கட்சியை உருவாக்கி குறுகிய காலத்தில் மிகப்பெரும் வெற்றியை பெற்றவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அதிமுக தொடங்கிய போது எம்.ஜி.ஆர் சந்தித்த இன்னல்களை விட பலமடங்கு இன்னல்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் சந்தித்தார். அதுமட்டுமின்றி திமுக எந்த காலத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்ததாக சரித்திரம் கிடையாது.
தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கியவுடன் 1972-ம் ஆண்டு அக்கட்சியை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் உருவான கட்சிதான் அ.தி.மு.க. கட்சி தொடங்கியதில் இருந்து 16 தேர்தலில் போட்டியிட்டு 7 முறை ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தில் அதிகமுறை ஆண்ட கட்சி நமது அதி.மு.க. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நான் முதலமைச்சரான பிறகு அ.தி.மு.க.வை அழிக்க பல சதி திட்டங்கள் தீட்டினார்கள். ஆனால், அவர்களால் ஒருபோதும் அதிமுகவை அழிக்க முடியாது என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர், நம்மிடம் இருந்த சிலரே பதவி வெறியில் இந்த கட்சியை எதிர்த்து ஓட்டு போட்டார்கள். அப்படி இருந்தும் அவர்களை மன்னித்து உயர்ந்த பதவியான துணை முதலமைச்சர் பதவி கொடுத்தும், அவர்கள் கட்சிக்கு விசுவாசமாக இல்லை. அ.தி.மு.க. ஓட்டு வங்கி குறைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு வங்கியை விட தி.மு.க.வுக்குத்தான் வாக்கு வங்கி குறைந்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.
மு.க.ஸ்டாலின் மேயர், எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதலமைச்சர் என படிப்படியாகத்தான் வந்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் கட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே துணை முதலமைச்சராகி விட்டார். தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை மு.க.ஸ்டாலின் அவரது மகனை துணை முதலமைச்சராக்கியது தான்.
தி.மு.க. ஆட்சியில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து விட்டது. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த சிறப்புக்குழு அமைக்கப்படும் என உயர்நீதிமன்றம் சொல்லும் அளவுக்கு தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது. இந்த ஆட்சியில் கஞ்சா எங்கும் கிடைக்கிறது. அதை முதலமைச்சரால் தடுக்க முடியவில்லை.
மக்களிடையே தி.மு.க.விற்கு தான் செல்வாக்கு குறைந்து வருவதால், அந்த கூட்டணியில் புகைச்சல் தொடங்கி விட்டது. அந்த புகைச்சல் விரைவில் நெருப்பாக பற்றி எரியும். சில நாட்களாக அதன் கூட்டணி கட்சியினர் பொது மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச தொடங்கி விட்டனர். நாம் சொந்த காலில் நிற்கிறோம். தி.மு.க. சொந்த கட்சியை நம்பாமல் கூட்டணியை நம்பி உள்ளனர். சிலர் விரைவில் கூட்டணியில் இருந்து வெளியே வர இருக்கின்றனர். பல கட்சிகள் வெளியே வர உள்ளது. நடப்பதை பார்க்கும்போது அப்படி தான் தெரிகிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எதிர்த்து குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். தி.மு.க. கூட்டணி விரைவில் உடையும் என்றார்.