சென்னை: ஐந்தரை ஆண்டு சித்தா படித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்ய எந்த தடையும் இல்லை” என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சித்த மருத்துவர் எஸ்.சிந்து என்பவரின் மருத்துவமனையில், கடந்த 2017 பிப்ரவரி 28ஆம் தேதி ஆய்வு செய்த மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர், அலுவலக அதிகாரி, மருத்துவர் சிந்து அலோபதி மருந்துகளை வைத்திருந்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்துள்ளார். இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், உரிமம் இன்றி மருந்துகளை வைத்திருந்ததற்காகவே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், உரிமம் இல்லாமல் மருந்துகளைப் பதுக்கி வைத்திருந்ததாகவும், விற்பனை செய்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் உத்தரவிட்டார்.
அதே சமயம், சித்த மருத்துவர்கள், அலோபதி மருத்துவம் செய்ய எந்த தடையும் இல்லை என்று தெரிவித்த நீதிபதி, அதற்காக அளவுக்கு அதிகமாக அலோபதி மருத்துகளை வைத்திருக்க முடியாது எனவும் தெரிவித்தார். மேலும், இது வழக்கு தொடர்பாக தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பிறப்பித்த அரசு உத்தரவையும் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்திய மருத்துவப் பயிற்சியாளர்கள் அலோபதி மருந்துகளை பரிந்துரைக்கும் வகையில், ‘பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர்’ என்பதை வரையறுக்கும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்தது.
இந்த திருத்தப்படி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோ பதி மற்றும் யுனானி போன்ற இந்திய மருத்துவம் படித்தவர்கள், அலோபதி சிகிச்சை வழங்கலாம் என அனுமதி அளித்து தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு செப்.8-ம் தேதி அரசாணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.