சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகள் 3 பேருக்கு ஜாமின் கொடுக்கலாமா? என்பது குறித்த காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில், தொடர்புடைய பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு மற்றும் ரவுடி நாகேந்திரன் அவரது மகனும் காங்கிரஸ் பிரமுகருமான அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளிகளான திருவேங்கடம் உள்பட 2 பேர் காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டடனர். மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக, ரவுடி சம்போ செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த கொலை வழக்கை விசாரித்து வரும் சென்னை மாநகர காவல்துறையினர், இந்த வழக்கில் கைதானவர்கள் மீது இதுவரை 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான சென்னை கோடம்பாகத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார், விஜயகுமார், திருவள்ளூர் நத்தமேடு காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், “தங்களுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை. எனவே, தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்பதாகவும்” தெரிவித்துள்ளனர்.
இந்த மனுவானது முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்.18 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.