ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே  தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ரூ.44 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கடல் சார் நீர் விளையாட்டு மையம்  அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கி வைக்கப்பட இருப்பதாக  அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில்,  ராமேசுவரம் பகுதியில்,  1,076 கி.மீ நீளத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக தெற்கே மன்னார் வளைகுடா, வடக்கே பாக் ஜலசந்தி என 237 கி.மீ நீளத்திற்கு இரண்டு கடல்கள் அமைந்துள்ளது. இதில் தனுஷ்கோடி, ராமேசுவரம் பாம்பன், பிரப்பன் வலசை ஆகிய கடற்கரை பகுதிகளில் அலைச்சறுக்கு, நீச்சல், துடுப்பு படகு, பெடல் படகு, உள்ளிட்ட பல்வேறு நீர் விளையாட்டுகளுக்கு ஏற்ற இடங்களாக உள்ளன.

இந்த இடங்களில் ஏற்கனவே தனியார் மூலம் பல்வேறு சுற்றுலாக்கள்அறிவிக்கப்பட்டு நடைமறையில் உள்ளது. மேலும், நீர் விளையாட்டு பகுதிகளும் அமைந்துள்ளது.மேலும் அருகே உள்ள தீவுகளுக்கு படகுகள் மூலம் அழைத்துச் செல்வதும் நடைபெற்று வருகிறது

அதுபோல,  ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக கடற்கரை பகுதியை சுத்தமாக வைத்திருத்தல், கடல்வளம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மீனவர்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கி மாநில மற்றும் தேசிய அளவிலான நீர்விளையாட்டுப் போட்டிகளை ராமேசுவரம், பாம்பன், அரியமான் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், ”ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும்” என அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து கூறிய  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள்,  “ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசை கடற்கரையில் நீர் விளையாட்டு வல்லுநர்கள் மூலம் கடல் நீரின் தரம், தண்ணீரின் ஓட்டம், காற்றின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, 7 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்க தமிழக அரசு ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்க உள்ளது” எனத் தெரிவித்தனர்.