சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 3வது நாளாக மழை நிவாரண பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இன்று கனமழையால் பாதிக்கப்பட்ட தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர். மழையை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய முயற்சி செய்கின்றனர் என்றும் விமர்சித்தார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த 13ந்தேதி முதல் கனமழை முதல் அதிகனமழை கொட்டியது. இதனால் பல இடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டன. இதையடுத்து, சென்னையின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அம்மா உணவங்களில் இரு தினங்கள் இலவசமாக உணவு வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களுக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில் ஆயிரக்கணக்கானோர் அரசு நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்பட அனைத்து வசதிகளையும் சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.
இதற்கிடையில், கனமழை பெய்ததால் தேங்கிய மழைநீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நடைபெறும் சாலைகளில் நேற்றே மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்ட நிலையில், இன்று தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது. மேலம், அந்த பகுதிகளில் தொற்று நோய் பரவாதவாறு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை கனமழை பாதிப்பு குறித்து கடந்த இரு நாட்களாக நேரடியாக சம்பவ இடத்துக்கே சென்று ஆய்வு நடத்தி நிவாரண பணிகளை முடுக்கி விட்ட முதல்வர் ஸ்டாலின் இன்று 3வது நாளாக மழை பாதிப்பு பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி, இன்று தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். பெரம்பூரை அடுத்த வீனஸ் நகர், ரெட்டேரி, பாலாஜி நகர், தணிகாசலம் நகரில் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.ரெட்டேரி ஏரியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு ரெட்டேரி ஏரியை தூர்வாரி குடிநீர் தேவைக்காக பயன்படுத்தும் வகையில் விரைவில் பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.
பின்னர் ஜம்புலிங்க மெயின்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்று தூய்மை பணியாளர்கள் மற்றும் முன் ‘கள’ பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சென்னை வெள்ள பாதிப்பில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து கொளத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு சுடச்சுட பிரியாணி பரிமாறிய முதலமைச்சர் அவர்களுடன் அமர்ந்து பிரியாணி உண்டார்.
பின்னர் மழைக்கால மருத்துவ முகாம்களையும் , மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, நாங்கள் செய்துள்ள பணி என்ன என்பது மக்களுக்கு தெரியும் மழையை வைத்து அரசியல் செய்கிறார், ஈ.பி.எஸ் என்று கூறியவர், எந்த மழை வந்தாலும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது. சென்னையில், வெள்ள தடுப்பு பணிகள் மக்கள் பாராட்டும் வகையில் சிறப்பாக நடந்துள்ளது. அதனால், அரசின் செயல்பாட்டை தாங்கிக் கொள்ள முடியாதவர்களே விமர்சிக்கிறார்கள் மழையை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய முயற்சி செய்கின்றனர் என விமர்சனம் செய்தார்.