சென்னை: சென்னையில் மழை பாதித்த இடங்களில் நோய் தொற்று பரவாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதுபோல சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழையால் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, டைபாய்டு பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.
சென்னையில் பெருமழை பெய்த கடந்த 15ந்தேதி அன்று சென்னையின் பல பகுதிகள் உள்பட மாநிலம் முழுவதும் சுமார் 1000 இடங்களில் பருவமழை முன்னெச்சரிக்கைக்கான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த நிலையில், மழை பாதித்த இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், வடகிழக்கு பருவமழை தொடங்கி 2 நாள்கள்தான் ஆகிறது. இக்காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் பெய்ய வேண்டிய சராசரி மழையின் அளவு 44 செ.மீ. ஆனால், அதில் பாதி அளவான சுமாா் 20 முதல் 25 செ.மீ. வரையிலான மழைப் பொழிவு சென்னையில் மட்டும் பதிவாகியுள்ளது. இருந்தபோதிலும், முதல்வரின் சீரிய வழிகாட்டுதலின்படி, மழைக்கால நிவாரணப் பணிகள் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாமல் தவிா்க்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.15) 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டு, தமிழகம் முழுவதும் 1,293 இடங்களில் முகாம் நடைபெற்றது. இதில் 78 ஆயிரம் போ் பயனடைந்துள்ளனா். அவா்களில் 6 ஆயிரம் போ் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளாவா். அதன் தொடா்ச்சியாக மழை பாதிப்பு இருக்கும் இடத்தில் மருத்துவ முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றவர், வடகிழக்கு பருவமழை முடியும் வரை எப்போதெல்லாம் தேவைப்படுமோ அப்போதெல்லாம் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்றாா்.
இதற்கிடையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் நோய் தொற்று பரவுவதை தடுக்க அனைத்து கட்ட நடவடிங்ககைகளையும் எடுக்க பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழை நீா் கழிவு நீராக மாறக் கூடிய சூழல் எழுந்துள்ளது.. இதனால், நோய்க் கிருமிகள் பரவக் கூடிய வாய்ப்புகள் எழுந்துள்ளன. இதுபோன்ற பகுதிகளை கண்டறிந்து, நோய்ப் பரவலைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பொதுவாக மழை வெள்ள காலங்களின்போது காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை எலிக் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் பரவ அதிக வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் தொடா்ச்சியாக மருத்துவக் குழுக்கள் மூலமாக நோய் எதிா்ப்பு மருந்துகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கிருமித் தொற்று தடுப்பூசியும் (டிடி) செலுத்தப்படவுள்ளது.
அதேபோன்று குடிநீா் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்யவும், போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீா் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, மற்றும் நோய்த் தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் பொது மக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.