ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக, உமர் அப்துல்லா நாளை பதவியேற்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, சமீபத்தில்  ஜம்மு-காஷ்மீரில்  சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டடது.  மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு,   3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.  அதன்படி, கடந்த செப்.18ஆம் தேதி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பர் 25-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில்,   ஜம்மு- காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. இதில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது.  அதாவது,  மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. பாஜக 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா  சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று (அக்.11) ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் எஸ்கே சின்ஹாவை சந்தித்த உமர் அப்துல்லா, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதைத்தொடர்ந்து மாநில ஆளுநர் உமர் அப்துல்லாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். எல்ஜியின் தூதுவர் கடிதத்தை அப்துல்லாவிடம் கொடுத்து, பதவியேற்பு விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் குறித்து அவருக்குத் தெரிவித்தார்.

இந்த நிலையில்,  ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக, உமர் அப்துல்லா  நாளை பதவியேற்கிறார்.  இந்த பதவி ஏற்பு விழா ஷெரி காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (Sheri Kashmir International Convention Centre )  நடைபெற உள்ளது. இதில் முதல்வர் ஓமருடன் ன் புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

முன்னதாக, இதுதொடர்பாக துணைநிலை அளுநர் அலுவலகம்,. டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனுக்கும், பின்னர் உள்துறை அமைச்சகத்திற்கும் ஆவணங்களை அனுப்ப வேண்டியிருப்பதால் பதவியேற்பு விழா சில நாட்கள் ஆகும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். முன்னதாக, நேற்று மாலை, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டார், புதிய அரசாங்கம் யூடியின் ஆட்சியைப் பெற வழிவகுத்தது.