வேளச்சேரி மேம்பாலத்தில் கார் நிறுத்தியவர்கள் மீது போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ரூ. 1000 அபராதம் விதிக்கும் நிலையில் மக்கள் அங்கிருந்து காரை எடுக்க மறுத்து வருகின்றனர்.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை அடுத்து இதை சமாளிக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதுடன் ஐ.டி. நிறுவன ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய வசதி செய்து தர அந்நிறுவனங்களுக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
வானிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து மாநில அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி காரணமாக சென்னை மக்களும் தங்கள் பங்கிற்கு இந்த கனமழையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.
மளிகை, பால், பிரெட் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைக்க மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஆண்டாண்டு காலமாக மழை வெள்ளம் வந்தால் நீரில் தத்தளிக்கும் வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தின் மீது பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
வேளச்சேரி பகுதியை மழை வெள்ளத்தில் இருந்து மீட்க எந்த ஒரு திட்டம் போட்டு பணம் ஒதுக்கினாலும் திட்டம் மட்டும் உதவாமல் போகும் நிலையில் இன்று மதியம் முதல் வேளச்சேரி மேம்பாலத்தில் காரை நிறுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் மாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்ட நிலையில் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களை எடுக்க அதன் உரிமையாளர்களை காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
இருந்தபோதும் அங்கிருந்து கார்களை எடுக்க அவர்கள் மறுத்து வருவதால் நாளொன்று ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்தனர்.
கடந்த காலத்தில் தங்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார்களை இழந்த அனுபவத்தைக் கொண்டும் தற்போது வரை உள்கட்டமைப்பில் எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படாததைக் கண்டும் அங்கிருந்து காரை எடுக்க இவர்கள் மறுப்பதுடன் அபராதம் கட்டி கார்களை நிறுத்தி வருகின்றனர்.