மும்பையில் நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அந்த விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறங்கியது.

மும்பையில் இருந்து இன்று (அக். 14) அதிகாலை 2 மணியளவில் புறப்பட்ட AI119 விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மும்பை விமான நிலையத்துக்கு எக்ஸ் சமூக வலைத்தளம் மூலம் தகவல் வந்தது.

இதையடுத்து டெல்லியில் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகன அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள டெல்லியில் இந்த விமானம் தரையிறங்கியுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டு டெல்லி விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து சோதனைகளுக்குப் பிறகு விமானத்தை மீண்டும் இயக்க அந்நிறுவனம் உத்தேசித்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன் திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டரை மணி நேரம் வானிலேயே வட்டமடித்த பின் திருச்சி விமான நிலையத்திலேயே இறங்கிய நிலையில் தற்போது ஏர் இந்தியா விமானத்திற்கு வந்திருக்கும் இந்த வெடிகுண்டு மிரட்டல் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.