கோவை: மோசமான வானிலை காரணமாக துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம், அங்கு செல்ல முடியாத நிலையில், கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இது விமான பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா – கோவா கடற்கரை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வட-மேற்கு திசையில் நகர்ந்து, மஹாராஷ்டிரா கடற்கரை பகுதியில் நிலை கொண்டுள்ளது.இது மேலும் வலுப்பெற்று, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலை, மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்ற-ழுத்த தாழ்வு மண்டலமாக நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கேரள மற்றும் தமிழ்நாட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக கேரளாவில் மழை பெய்து வருகிறது. மேலும் வான மேகமூட்டத்துடன் காணப்படுவதால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையம் நோக்கி இன்று (அக்.12) காலை வந்துகொண்டிருந்த ‘ஃப்ளை துபாய்’ விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவிய காரணத்தால் அரை மணி நேரத்துக்கு மேல் வானில் வட்டமிட்ட அந்த விமானம், பின்னர் விமான நிலைய அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
இதையடுத்து இன்று காலை 7. 45 மணியளவில் கோவையில் விமானம் தரையிறங்கியது. வானிலை சீரான தகவல் கிடைத்தபின் மீண்டும் விமானம் கோழிக்கோடு புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அல்லது, கோவையில் இருந்து விமான பயணிகள் கார் மற்றும் பேருந்துகள் மூலம் கோழிக்கோடு அழைத்து செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.