2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும் தான் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் இந்திய பொருட்களுக்கு பரஸ்பரம் வரியை அதிகரித்து அமெரிக்காவை மீண்டும் பணக்கார நாடாக மாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு கட்டமாக வியாழன் அன்று டெட்ராய்டில் பொருளாதாரக் கொள்கை குறித்து உரையாற்றிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இவ்வாறு பேசினார்.
அமெரிக்காவின் வெளிநாட்டு வர்த்தகம் குறித்து பேசிய டிரம்ப், சீனா, பிரேசில் ஆகிய நாடுகளை விட அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக வரி விதிப்பதாகக் கூறினார்.
தான் அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகைக்கு வந்த ஹார்லி டேவிட்சன் குழுவினருடன் பேசிய போது மிக அதிகமாக இந்தியாவில் 150 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
இந்திய பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர் என்று பாராட்டிய டிரம்ப் அதேவேளையில் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை உயர்த்தியது குறித்து விமர்சித்தார்.
தான் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் அமெரிக்காவை மீண்டும் பணக்கார நாடாக மாற்ற சீனாவை விட அதிக வரி வசூலிக்கும் இந்தியா மீதும் இந்திய பொருட்கள் மீதும் பரஸ்பரம் வரியை உயர்த்த இருப்பதாகத் தெரிவித்தார்.