சோசலிச சித்தாந்தத்தின் அடையாளமான லோக்நாயக் ஜெய் பிரகாஷ் நாராயணின் பிறந்தநாள் இன்று உ.பி.யில் கொண்டாடப்பட்டு வருகிறது.

லக்னோவில் உள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்தில் (JPNIC) அமைந்திருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப் போவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்திருந்தார்.

ஆனால், ஜெய்பிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்துக்குச் செல்ல அகிலேஷ் யாதவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அகிலேஷ் யாதவின் வீட்டைச் சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டிற்குள் சென்ற காவல்துறை உயரதிகாரிகள் JPNIC செல்லக்கூடாது என்று அகிலேஷ் யாதவிடம் வலியுறுத்தினர்.

காவல்துறையின் அறிவுரையை ஏற்காத அகிலேஷ் யாதவ் JPNIC சென்றதை அடுத்து அங்கு கூடியிருந்த சமாஜ்வாதி கட்சியினர் இடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

அதேவேளையில், ஜெய்பிரகாஷ் நாராயண் சர்வதேச மைய வாயில் தகர ஷீட்டுகள் கொண்டு அடைக்கப்பட்டிருந்த நிலையில் கேட்டின் மீது ஏறி குதித்து உள்ளே சென்றார் அகிலேஷ் யாதவ்.

அவரைத் தொடர்ந்து அவரது கட்சித் தொண்டர்களும் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனால் காவல்துறையினர் செய்வதறியாமல் திகைத்தனர்.

சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று ஜெய்பிரகாஷ் நாராயணன் சிலைக்கு மாலை அணிவித்து வந்த அகிலேஷ் யாதவ், வாரணாசியில் சர்வ சேவா சங்கத்தை இடித்தது போல லக்னோவில் உள்ள JPNIC-யையும் இடித்துவிட்டு ஒரு பெரிய தொழிலதிபருக்கு விற்க மத்திய மாநில பாஜக அரசு முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

ஜெயபிரகாஷ் நாராயணன் சிலைக்கு மாலை அணிவிக்க அகிலேஷ் யாதவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சுவர் ஏறி குதித்து ஜெய்பிரகாஷ் நாராயண் சர்வதேச மைய வளாகத்திற்குள் நுழைந்த விவகாரம் உ.பி. அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.