திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக தாம்பரத்துக்கு திங்கள்கிழமை, வியாழக்கிழமை தவிர்த்து மற்ற 5 நாட்களில் பகல்நேர இன்டர்சிட்டி ரயிலை தெற்கு ரயில்வே இன்று முதல் தொடங்கியுள்ளது.

இந்த ரயில் இன்று தஞ்சாவூர் வந்த போது தஞ்சை ரயில் நிலையத்தில் தஞ்சை எம்.பி முரசொலி தலைமையில் ஏராளமானோர் உற்சாகமாக வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திருச்சி – சென்னை தாம்பரம் இடையிலான இந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மூன்று மாத காலம் சோதனை ஓட்டமாக திருச்சியில் அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூருக்கு காலை 6:25 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், திண்டிவனம் வழியாக தாம்பரத்துக்கு மதியம் 12.35 மணிக்குச் சென்றடையும்.

பின்னர் மறுமார்க்கத்தில் மாலை 3:35 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 10.15 மணிக்கு தஞ்சாவூருக்கும், 11.35 மணிக்கு திருச்சி-க்கும் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இன்டர்சிட்டி ரயிலை சோதனை ஓட்டமாக இல்லாமல் தொடர்ச்சியாக இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டைப் பொறுத்து தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.