சென்னை: நாளை விஜயதசமி பண்டிகையையொட்டி, மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில், அரசு பள்ளிகள் நாளை செயல்படும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது.
சரஸ்வதி பூஜை, ஆயதபூஜையை முன்னிட்டு, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நாளை (அக்டோபர் 12ந்தேதி) சனிக்கிழமை விஜயதசமி என்பதால், மாணவர் சேர்க்கை நடத்த அரசு பள்ளிகள் திறந்திருக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
விஜயதசமி நாள் கல்வியில் சிறந்து விளங்கும் நாள். அதனால், நாடு முழுவதும் ஏராளமான பெற்றோர்கள் விஜயதசமி நாளான்று தங்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பர். அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் விஜயதசமி நாளான்று தனியார் பள்ளிகள் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும். இதையொட்டிடி, அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் விஜயதசமி அன்று தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதுடன், கல்வித் தரமும் உயர்ந்துள்ளது. இதனால் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், விஜயதசமி போன்ற முக்கிய நாட்களில் பள்ளிகளைத் திறந்து வைத்து, பெற்றோர்களை அரசு பள்ளிகளுக்கு ஈர்க்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
`பள்ளியைச் சுற்றி உள்ள குடியிருப்புகளில் 5 வயது பூர்த்திசெய்துள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை விஜயதசமி நாளன்று பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதுடன் அன்றைய தினமே விலையில்லாப் பாடப்புத்தகம், சீருடைகளை வழங்க வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தொடர் விடுமுறைகளால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பெரும்பாலான குடும்பங்கள் வெளியூர் சென்றுள்ள நிலையில், அரசு திடீரென பள்ளிகளை திறந்து வைத்து மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தி உள்ளது ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.