சென்னை: அரபிக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இன்று   தமிழ்நாட்டில் சென்னை உள்பட 1 3 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. மேலும்,  சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அக்.10, 11 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. லட்சட்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி  மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்புள்ளது இதனால்,  குமரி கடல் பகுதி  உள்பட  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  மேலும்,  சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  கேரள கடலோரப் பகுதி மற்றும் லட்சத்தீவுக்கு இடைப்பட்ட அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புதன்கிழமை உருவாகியுள்ளது. இது, வட மேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அக்.13-ஆம் தேதிக்கு மேல் ஓமன் பகுதியைச் சென்றடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கிடையே, குமரிக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளிலும், இலங்கை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், வியாழக்கிழமை (அக்.10) முதல் அக்.15-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, அக்.10-இல் சேலம், கிருஷ்ணகிரி தருமபுரி, திருப்பத்தூா், நாமக்கல், அரியலூா், பெரம்பலூா், கரூா், திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், அக்.11-இல் கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆரஞ்ச் எச்சரிக்கை:

அக்.12-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், அக்.13-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.