சென்னை: சென்னையில் 25 தாழ்தள பேருந்துகள் சேவையை தமிழ்நாடு போக்குவரத்து தறை  அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து, அதில் பயணம் செய்தார்.

மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கென கொள்முதல் செய்யப்பட்ட 25 தாழ்தள பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், ஜெர்மன் துணைத் தூதர் மைக்கேலா குச்லர் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 352 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பல கட்டமாக இது நாள் வரை ரூ.170.60 கோடியில் 188 தாழ்தள பேருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.22.69 கோடி மதிப்பீட்டில் அடுத்தக்கட்டமான 25 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை, பல்லவன் சாலையில் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், ஜெர்மன் துணைத் தூதர் மைக்கேலா குச்லர் ஆகியோர் கொடியசைத்து பேருந்துகளைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் பேருந்தில் சிறிது தூரம் பயணித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஜெர்மன் துணைத் தூதர் மைக்கேலா குச்லர்  , நான் தொடர்ச்சியாக மாநகர பேருந்துகளில் பயணிக்கிறேன். இங்கு பெண்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கட்டணமில்லா பயண சேவையை, பெண்ணிய பார்வையில் பாராட்டுகிறேன். மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 5 சி வழித் தடத்தில் தாழ்தள பேருந்துகளை இயக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.” என்றார்.

மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேசும்போது, “சுற்றுச்சூழலுக்கு இணக்கமான பேருந்துகளை இயக்கும் வகையில் ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதியுதவி மூலம் சுமார் ரூ.7,492 கோடி மதிப்பீட்டில் 5 கட்டமாக திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,213 பி எஸ் 6 டீசல் பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள், 552 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இத்திட்டத்தில் பேருந்துகள் கொள்முதல் தவிர்த்து, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துக்கான நவீன மென்பொருள் உருவாக்கம், நவீன தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ளும் வகையில் ஓட்டுநர்களுக்கு பயிற்சி உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளது” என்றார்.

இந்நிகழ்வில், போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, ஜெர்மன் வங்கியின் இந்திய நாட்டுக்கான இயக்குநர் உல்ஃப் முத், முதுநிலை போக்குவரத்து நிபுணர் சுவாதி கண்ணா, மாநகர போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் நடராஜன், சாலை போக்குவரத்து நிறுவன இயக்குநர் சு.ரங்கநாதன், போக்குவரத்து நிதி கழக இணை மேலாண் இயக்குநர் வெங்கட் ராஜன், தொமுச பொருளாளர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, கடந்த அகஸ்டு மாதம்  தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,   “2022-23 ஆம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகள் 2 கொள்முதல் செய்ய ரூபாய் 420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 833 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள 167 பேருந்துகள் நவம்பர் 2024க்குள் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் (SADP) கொள்முதல் செய்யப்பட்ட 16 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

2023-24 ஆம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 446.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 888 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள 112 பேருந்துகள் நவம்பர் 2024க்குள் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். 2024-25 ஆம் நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 1535.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 503 பேருந்துகளுக்கு விலைப்புள்ளி நிர்ணய ஆணை வழங்கப்பட்டு நவம்பர் 2024க்குள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும். மேலும் 2 ஆயிரத்து 544 பேருந்துகளுக்கு விலைப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி (KfW) உதவியோடு மொத்தம் 2 ஆயிரத்து 166 பிஎஸ் – 4 (BS-VI) டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இதில் 552 தாழ்தளப் பேருந்துகளுக்குக் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு 59 தாழ்தள பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள 493 பேருந்துகள் நவம்பர் 2024க்குள் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். மேலும், 1,614 புதிய டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 500 மின்சார பேருந்துகளுக்கு ஒப்பந்தப்புள்ளி தயார் செய்யப்பட்டு ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியின் ஒப்பந்தப் புள்ளி ஒப்புதலுக்குப் பிறகு கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உலக வங்கி உதவியுடன் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஜிசிசி (GCC) அடிப்படையிலான 500 மின்சார பேருந்துகள் இயக்குவதற்கு விலைப்புள்ளி கோரப்பட்டு ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டுள்ளன. விரைவில் பணி ஆணை வழங்கப்படும். கடந்த 23 ஆம் தேதி (23.08.2024) வரை, 3 ஆயிரத்து 71 புதிய பேருந்துகளுக்குக் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு, இது வரை 1,796 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

2022-23 ஆம் நிதியாண்டில் அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்க ரூபாய் 154 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 910 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 2023-24 ஆம் நிதியாண்டில் அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்க ரூபாய் 76.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 154 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மொத்தமுள்ள 1,500 பேருந்துகளில் 23 ஆம் தேதி வரை அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1064 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து தாழ்தள பேருந்துகள் வாங்கப்பட்டு, சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இயக்கப்பட்டு வருகிறது.