டெல்லி: காஷ்மீரில் நடைபெற்று முடிந்த தேர்தலில்  இண்டியா கூட்டணி  வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது இந்த நிலையில்,  இண்டியாக கட்சி கூட்டணி கட்சி ஆட்சியால், தங்களது தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல,  மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைக்கு வாய்ப்பு உள்ளதாக  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில்  பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசால் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தர முடியாது என்று முன்னாள் காஷ்மீர் மாநில முதல் வரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான  குலாம் நபி ஆசாத் கூறியிருக்கிறார். இது மீண்டும் விவாதப்பொருளாக மாறி உள்ளது.

கடந்த  2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதை எதிர்த்து அங்கு பாஜகவைத் தவிர மற்ற முன்னணி கட்சியினர் குப்கர் கூட்டணி என அமைத்து ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் திரும்ப பெறுவோம் என்ற நோக்கில் குரலெழுப்பி வருகின்றனர். இந்த குரல் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்தது.

தேசிய மாநாட்டு கட்சியின் தேர்தல் அறிக்கையில், காஷ்மீரில் மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொண்டு வரப்படும் என உறுதி அளித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிங்ககையில் சிறப்பு அந்தஸ்து குறித்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.  இதுவும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதேவேளையிங்ல பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,  சட்டப்பிரிவு 370 வரலாற்றின் ஒரு பகுதியாகும், அது மீண்டும் வராது என்பதை வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான பாஜகவின் அறிக்கையை யூனியன் பிரதேசத்தில் இருந்து “பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் துடைப்போம்” என்ற உறுதிமொழியுடன் வெளியிட்டார்.

370வது சட்டப்பிரிவை மீட்டெடுப்பதற்கு அழைப்பு விடுக்கும் தேசிய மாநாட்டின் தேர்தல் அறிக்கையைப் விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா,  “பிரிவு 370 என்றென்றும் புதைக்கப்பட்டுவிட்டது. அதை மீட்டெடுக்கும் முயற்சிகளை பாஜக அனுமதிக்காது. அது திரும்பி வராது” என்றார். மேலும், காங்கிரஸ் தேசிய மாநாடு கட்சி ஆகிய   இரண்டு கட்சிகளும் கூட்டாளிகளாக இருப்பதால், NCயின் தேர்தல் அறிக்கை மீதான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன என்று  கேள்வி எழுப்பியதுட,ன வரும் அவரது கட்சியும் என்சி தேர்தல் அறிக்கையை ஆதரிக்கிறதா என்பதை ராகுல் விளக்க வேண்டும். இது பிரிவு 370 ஐ மீட்டெடுப்பது , பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதில் ஈடுபட்டுள்ள கல் எறிபவர்கள் மற்றும் கைதிகளை விடுவிப்பதாக உறுதியளிக்கிறது. நான் ராகுலிடம் கேட்க விரும்புகிறேன், அவரும் அவரது கட்சியும் ஜே & காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தின் மறுமலர்ச்சியை விரும்புகிறீர்களா? என்று  காட்டமாக விமர்சித்து இருந்தார்..

இந்த நிலையில், சட்டப் பிரிவு 370 நீக்கத்தை திரும்பப் பெறுவது இனிமேல்  சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.  காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகள்,  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் திரும்ப பெறுவோம் என்ற நோக்கில் குரலெழுப்பி வருகின்றனர்.  ஆனால்,  சட்டப் பிரிவு 370 நீக்கத்தை  திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்றவர்,  “நான் யாரையும் ஏமாற்ற விரும்பவில்லை. வாக்குக்காகவோ, அரசியலுக்காகவோ நான் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. எனவே, முடியாத விஷயத்தை பற்றி நாம் விவாதிக்க விரும்பவில்லை. 370 சட்டப் பிரிவை மீண்டும் திரும்பப் பெற முடியாது. அது முடிந்து போன கதை. எனவே எந்த அரசியல் கட்சியாலும் அதை திரும்ப பெற முடியாது” என்று தெரிவித்தார்.

அதுபோல, மத்தியஅரசும், இனிமேல் காஷ்மீர் மாநிலத்துக்கு எந்தவொரு அரசாலும் சிறப்பு அந்தஸ்து கொண்டு வர முடியாது என உறுதிப்பட தெரிவித்து உள்ளது. அதுபோல உச்சநீதிமன்றமும், சிறப்பு அந்தஸ்து ரத்தை உறுதி செய்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பிலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கை செல்லும் என்றும்,   இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே ஜம்மு காஷ்மீருக்கும் தனி இறையாண்மை கிடையாது என்றும் உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க உள்ள நிலையில், இந்த விவகாரம் மீண்டும் விவாதப்பொருளாக மாறி உள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்பொழுது மாநிலத்தில்  ஆட்சி அமைக்கும் இண்டியா கூட்டணியால், மீண்டும்  சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப் பெறுவது இயலாத காரியம். ஜம்மு-காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்படுகிற அரசால் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப முடியுமே தவிர, வேறொன்றும் செய்ய இயலாது. இன்றைய சூழலில் காஷ்மீர் மக்களுக்கு வேண்டியது அமைதியே ஒழிய, சிறப்பு அந்தஸ்து என்பது இரண்டாம்பட்சம்தான். அதைப் புரிந்துகொண்டு பதவியேற்கப் போகும் அரசு செயல்பட வேண்டும் என்று ஒருவர் கருத்தை பதிவிட்டுள்ளார்.

பாஜகவின் நீண்ட நாள் கனவே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என்பதே. அதைத் துணிச்சலுடன் சென்ற பாஜக அரசு நிறைவேற்றியது. மத்தியில் மீண்டும் பாஜக அரசே அமைந்திருப்பதால் மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சிறப்பு அந்தஸ்தை இனி மீட்டுத் தருவது கடினம் என்பது நிதர்சனமான உண்மை.

எப்படி திராவிட கட்சிகள் நீட் தேர்வை ஒழிப்போம் என்பதை தேர்தல் வாக்குறுதியாக வைத்து மக்களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்றியதோ, அதுபோல, காஷ்மீரில் இண்டியா கூட்டணி கட்சிகள் இதுபோன்ற வாக்குறுதியை அளித்து வெற்றி பெற்றுள்ளனர். இது வெறும் தேர்தல் அறிவிப்பாக மட்டுமே இனி ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தும் ஆகும் என்பது கனவே என்றும் விமர்சித்துள்ளார்.

மற்றொருவர்,  காஷ்மீர் மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைந்தாலும் மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைக்காது என்பதே உறுதி என்று கூறியுள்ளார்.

வேறொருவர்,  மத்தியில் ஆட்சிக்கு வரும் வரை எதிர்கட்சியினர், சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டு வருவோம் என  கூறிக் கொண்டே இருப்பார்கள். ஏனெனில் காஷ்மீரில் இருக்கும் ஒருசிலர் பல ஆண்டுகளாக அனுபவித்த சலுகைகளை விட்டுக் கொடுக்க மனம் வராது. தற்போதுதான் காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. மிகுந்த அரசியல் அனுபவம் மிக்கவரான குலாம் நபி ஆசாத் கூறியிருப்பது முற்றிலும் சரியே என கூறியுள்ளார்.

பல வருடங்களாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு, அதனால் எந்தவித பயனும் இல்லாமலிருந்தது. வன்முறை தீவிரவாதம் மேலோங்கியது. ஒட்டுமொத்த பாரத வளர்ச்சிக்கு இம்மாநிலத்திற்கு மட்டும் தனி அந்தஸ்து இருப்பது இடையூறு என்பதால் சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு ரத்து செய்தது. தற்பொழுது வெற்றிகரமாகத் தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தலுக்குப் பிறகு புதிய அரசால் இம்மாநிலத்திற்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெற முயற்சிப்பது தேவையற்றது.

சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டு வருவோம் என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் முயற்சியே. மத்தியில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியமைத்தால் இது சாத்தியமாகலாம். அது வரை இது வெறும் அரசியல் பேச்சு மட்டுமே. எது எப்படியாயினும், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் எனும்போது அதனை அப்படியே தொடர்வதுதான் அரசியல் நாகரிகம் ஆகும்.

காங்கிரஸ் கட்சி அல்லது ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தர விரும்பும் எந்த கட்சியும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் தேர்தல் வாக்குறுதி அளிப்பது எதன் அடிப்படையில் என்பது தெரியவில்லை. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்க்கத் துணிவில்லாத அரசியல் கட்சிகள் வாய் சவடால் விடுவது வேடிக்கை. தேர்தல் நடைபெறுவது, வாக்களிப்பது என்று மக்கள் மனதில் ஜனநாயக பாதை மலர்வதைப் பார்க்கும்போது அரசியல் கட்சிகள் சுயநலத்திற்காக வீண் வாக்குறுதிகள் தருவதாகத் தோன்றுகிறது.

அரசியல் சாசன பிரிவு 370 நீக்கப்பட்ட பின் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் சமீபத்தில் மிகவும் அமைதியாக நடந்தேறி உள்ளது. இது இந்திய ஜனநாயகத்தின் வெற்றி என்பதில் ஐயமில்லை. ஜம்மு-காஷ்மீர் பகுதி இந்திய தேசத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்பதே நமது நிலைப்பாடு. பிரிவினைவாதம் ஒடுக்கப்பட வேண்டும். பிரிவினைவாதிகளுக்கு அஞ்சி நாட்டைக் கூறு போடுவதும் தடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஏராளமானோர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.