அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு ஆதரவாக உலகின் முன்னணி தொழிலதிபர்களின் ஒருவரான எலன் மஸ்க் செயல்பட்டு வருகிறார்.
டொனால்ட் டிரம்ப்-க்கு ஆதரவாக வெளிப்படையாகவே பேசிவரும் எலன் மஸ்க் பேச்சு சுதந்திரம் மற்றும் துப்பாக்கி வைத்துக்கொள்வது குறித்த சட்ட திருத்தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.
குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் இடையேயான போட்டியில் பெனிசில்வேனியா, ஜார்ஜியா, நெவடா, அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின், வடக்கு கரோலினா ஆகிய 7 மாகாண வாக்காளர்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.
24 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட இந்த மாகாண மக்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பது என்பது குறித்து இதுவரை தெளிவாக இல்லாத நிலையில் இவர்களின் வாக்குகளை கவர இரு கட்சிகளின் வேட்பாளர்களும் இந்த மாகாணங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேச்சு சுதந்திரம் மற்றும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான சட்டத்திருத்தம் குறித்து டிரம்ப் பேசிவரும் நிலையில் அவரது இந்த கருத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்த எலன் மஸ்க் முன்வந்துள்ளார்.
அக்டோபர் 21ம் தேதி நிறைவடைய உள்ள இந்த ஆன்லைன் பெட்டிஷனில் தங்கள் வாக்குகளை செலுத்த அழைப்பு விடுத்துள்ள எலன் மஸ்க் பேச்சு சுதந்திரம் மற்றும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பவர் ஒவ்வொருவருக்கும் $47 (சுமார் ரூ. 4000) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
10 லட்சம் வாக்காளர்களை இலக்காகக் கொண்டு களமிறங்கியுள்ள எலன் மஸ்க், பெனிசில்வேனியா, ஜார்ஜியா, நெவடா, அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின், வடக்கு கரோலினா ஆகிய 7 மாகாண வாக்காளர்களுக்கு மட்டும் மஸ்க் பேக் என்ற அறக்கட்டளை மூலம் பணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தேர்தலுக்கு முன்னான வெள்ளோட்டமாக நடத்தப்பட உள்ள இந்த கருத்துக் கணிப்பு மூலம் வாக்காளர்களுக்கு 400 கோடி ரூபாயை நேரடி பணப் பட்டுவாடா செய்யப்போவதாக எலன் மஸ்க்-கின் இந்த அறிவிப்பு அமெரிக்க வாக்காளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.