டெல்லி: பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம்,  ஜனநாயக நாடுகளில் ஒருவரின் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் மதிக்கப்படுகிறது.

நாட்டில் கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும், பத்திரிகையாளர் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19 (1) (a) பிரிவின் கீழ் பத்திரிகை யாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் பத்திரிக்கையாளர் அபிஷேக் உபாத்யாய்க்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆருக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக மட்டும் ஊடகவியலாளர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது என சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பில் உறுதி செய்தது. ஜனநாயகத்தில் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நீதிமன்றம் வலியுறுத்தியதோடு, அரசாங்கத்தை விமர்சிப்பது சட்ட நடவடிக்கைக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதையும்  வலியுறுத்தியது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு நிர்வாகத்தில் நிலவும் சாதிய போக்குகள் தொடர்பாக கட்டுரை வெளியிட்டதற்காக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என பத்திரிகையாளர் அபிஷேக் உபாத்யாய் என்பவர் தொடுத்த வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றம் மேற்கூறிய கருத்துகளை தெரிவித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதிகள் கூறுகையில், “ஜனநாயக நாடுகளில் ஒருவரின் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் மதிக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19 (1) (a) பிரிவின் கீழ் பத்திரிகையாளர் களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.

ஒரு பத்திரிகையாளரின் எழுத்துகள் அரசாங்கத்தை விமர்சிப்பதாக கருதப்படுவதால், எழுத்தாளர் மீது கிரிமினல் வழக்குகள் போடப்படக்கூடாது.” என்றனர். மேலும், இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரப் பிரதேச அரசு மற்றும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பத்திரிக்கையாளர் அபிஷேக் உபாத்யாய், உத்தரப் பிரதேசத்தில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ள அதிகாரிகள் மீது சாதிய கண்ணோட்டத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். இந்த கட்டுரை வெளியான பிறகு, லக்னோ போலீசார் அவர் மீது வழக்குத் தொடுத்தனர்.