சென்னை:  தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என  தலைமை தேர்தல் அதிகாரி  தெரிவித்து உள்ளார். அதன்படி,  நவம்பர் 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், நவம்பர் 9, 10, 23, 24 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

வரும் ஜன.1, 2025 அன்று 18 வயதை பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற உள்ளது.

தேவையான அளவு படிவங்களை வைத்திருக்க அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்யலாம். மேலும்,  ஜனவரி மாதம் 1-ந் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும், ஏப்ரல் மாதம் 1-ந் தேதி, ஜூலை மாதம் 1-ந் தேதி, அக்டோபர் மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே கொடுக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள் அந்தந்த காலாண்டின் தொடக்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, வெளிநாடுவாழ் வாக்காளரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஏ, தன் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க படிவம்-6 பி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க படிவம்-7,  ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய, ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை, புகைப்படத்தை திருத்தம் செய்ய படிவம்-8 விண்ணப்பிக்க வேண்டும்.

பொதுமக்கள் https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline App என்ற செல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்:

முகவரிசான்று

1.ஆதார் கார்டு
2.வங்கி கணக்கு புத்தகம்
3.பாஸ்போர்ட்
4.கேஸ் பில்
5.தண்ணீர் வரி ரசீது
6.ரேசன் அட்டை
7.வாடகை ஒப்பந்த பத்திரம்

வயது சான்று

1.பத்தாம் வகுப்பு சான்றிதழ்
2.பிறப்பு சான்றிதழ்
3.பான்கார்டு
4.ஆதார் கார்டு
5.ஓட்டுநர் உரிமம்
6.கிசான் சான்று

அடையாள சான்று

1.ஆதார்கார்டு
2.பான்கார்டு
3.ஓட்டுநர் உரிமம்
3.ரேசன் கார்டு
4.பாஸ்போர்ட்
5.வங்கி கணக்கு புத்தகம்
6.பத்தாம் வகுப்பு சான்றிதழ்
7.பிறப்பு சான்றிதழ்

மேற்கண்ட 3 ஆவணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு ஜெராக்ஸ் கொண்டு செல்லவும்.

இந்த தகவலை தமிழ்நாடு தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.