சென்னை: கோடை வாசஸ்தலங்களான  ஊட்டி,  கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து உள்ளனர்.

சென்னை உள்பட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கொளுத்தும் வெயில் காரணமாகவும், காலாண்டு விடுமுறை காலம் என்பதால், ஏராளமானோர் ஊட்டி, கொடைக்கானல் உள்பட கோடை வாசஸ்தலங்களுக்கு செல்கின்றனர். இந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இ-பாஸ் நடைமுறை தொடரும் என மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்து உள்ளனர்.

ஏற்கனவே உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மே 7-ஆம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. உதகையில் முறையான சாலைகளோ, மேல்பாலங்களோ இல்லாத நிலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் பல மணி நேரம் வாகனங்களில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இ-பாஸ் நடைமுறையால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதோடு, தங்கும் விடுதிகளின் கூடுதல் கட்டணம், தண்ணீா்ப் பிரச்னை இவை எல்லாம் கட்டுக்குள் வரும் என்பதால், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி,   நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.