டெல்லி: நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரிக்க அமைக்கப் பட்டுள்ள குழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 3 வாரம் அவகாசம் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5ந்தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு தொடர்பாக ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன. பீகார் உள்பட பல மாநிலங்களில் வினாத்தாள் கசிவானது தெரிய வந்தது. மேலும் தேர்வு முடிவுகளிலும் கருணை மதிப்பெண் உள்பட பல சர்ச்சைகள் எழுந்தன. இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் பீகார், ஜார்கண்ட், குஜராத், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையை சீரமைக்கவும், நீட் தேர்வை குளறுபடி இல்லாமால் நடத்த பரிந்துரை வழங்கவும் இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதை ஏற்ற உச்சநீதிமன்றம், நீட் தேர்வு மோசடிகளை தடுக்க அமைக்கப்பட்ட குழு, செப்டம்பர் .30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய ம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், குழு அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 3 வாரம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல் செய்து உள்ளது.
அந்த மனுவில், “மாணவர்கள், கள்வியாளர்களிடமிருந்து 37,000 கருத்துகள் பெறப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்து இறுதி பரிந்துரை தயாரிக்க அக்டோபர் 21ம் தேதி வரை அவகாசம் வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.