லட்டு விவகாரத்தில் தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்த மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர் 27ந் தேதி வெளியாக உள்ளது.

தமிழ், மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு தெலுங்கில் ‘சத்யம் சுந்தரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கான ப்ரோமோ ஹைதராபாத்தில் நேற்று செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது மேடையேறிய நடிகர் கார்த்தியிடம், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி, ‘உங்களுக்கு லட்டு வேணுமா?’ என்று கேட்க, அதற்கு கார்த்தி இப்போது லட்டு குறித்து பேச வேண்டாம், அது சென்சிட்டிவான விஷயம். எனவே லட்டு தொடர்பாக இப்போது பேச வேண்டாம் எனக் கூறினார்.

“மோதி லட்டாவது வேண்டுமா ?” என்று விடாமல் தொடர்ந்து கேட்ட தொகுப்பாளினியிடம், “எனக்கு லட்டே வேண்டாம் ஆளை விடுங்கள்” என்று கார்த்தி பதிலளித்தார்.

கார்த்தியின் பதிலைக் கேட்டு அரங்கில் இருந்த பலர்,கைத்தட்டி சிரித்தனர்.

அதேவேளையில் அவரது இந்த லட்டு பேச்சை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் “சினிமா நிகழ்வில் லட்டு வைத்து கிண்டலடித்து பேசுகிறார்கள். மேலும் லட்டு சென்சிடிவ்வான விஷயம் எனவும் சொல்லுகின்றார்கள். எங்கள் நம்பிக்கையை ஒருபோதும் அப்படி சொல்லாதீர்கள், நடிகர்களுக்கு மரியாதை கொடுக்கிறேன். அதேநேரத்தில் , சனாதான தர்மம் என வரும் போது பேசும் வார்த்தையை நூறுமுறை யோசித்துத் பேச வேண்டும்” என மிகவும் காட்டமாக கண்டித்திருந்தார்.

இதையடுத்து “”பவன்கல்யாண் சார், உங்கள் மீது எனக்கு எப்போதும் மிகப்பெரிய மரியாதை உள்ளது. நான் பேசியது எதிர்பாராதவிதமாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை எப்போதும் பின்பற்றுகிறேன்” என்று நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.