திருச்சி:  பிரபல பல்கலைக்கழகங்களின் பெயரில் போலி மருத்துவச் சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்து வந்த திமுக ஆதரவாளரான தமிழ்நாடு  சித்த மருத்துவ மாநிலத் தலைவர் சுப்பையா பாண்டியன்  கைது செய்யப்பட்டு உள்ளார்.

விசாரணையில் இவரும் போலி மருத்துவர் என்பது தெரிய வந்துள்ளது. இவர், இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியைச் சேர்ந்த பாரம்பரிய சித்த மருத்துவர் சுப்பையா பாண்டியன், திமுக ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.  இவர் அமைச்சர் நேருக்கு நெருக்கமானவர். இவர் திமுக தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாட்களின்போது, இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருவதுடன்,  கடந்த மாதம் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சித்த மருத்துவர்கள் மாநாட்டை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், போலி சான்றிதழ் விவகாரத்தில் மருத்துவர் சுப்பையா பாண்டியன் சிக்கியுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவர் திருச்சியில் மாதந்தோறும் சித்த மருத்துவ கூட்டம்  நடத்தி வந்துள்ளார். இவரிடம்  அரசியல் கட்சியினர் உள்பட பலரும் வந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்த முகாம்களின்போது,   கன்னியாகுமரியைச் சேர்ந்த கவுதமன் என்ற ஒஸ்தின் ராஜா என்பவர், சுப்பையா பாண்டியனைச் சந்தித்து தான் மருத்துவம் படித்ததற்கான சான்றிதழ் தருவதாக கூறியுள்ளார். இதற்காக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.5லட்சம் வரை பெற்றுள்ளார். இதேபோல், தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலிச் சான்றிதழ்களை விநியோகம் செய்துள்ள நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில்,கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமத்தில் வாய்க்கால் பாலம் அருகில் கடந்த ஜூன் 19-ம் தேதி அண்ணா மலை பல்கலைக்கழக சான்றிதழ்கள் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், சான்றிதழ்களை பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்தனர். அதில், சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என தெரியவந்துள்ளது.

இதுபற்றி அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் கிள்ளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிதம்பரம் மன்மதசாமி நகரைச் சேர்ந்த சங்கர், நாகப்பன், அருட்பிரகாசம் ஆகிய 3 பேரும், போலி சான்றிதழ்கள் தயாரித்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதற்கு பின்புலமாக செயல்பட்டது, திருச்சி திமுக நிர்வாகியான சித்த மருத்துவர் சுப்பையா பாண்டியன் என்பது தெரிய வந்தது. இவர்மூலம்  இந்தியாவில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களின் பெயரில் ஆயிரக்கணக்கான சான்றிதழ்கள் போலியாக தயாரித்து கொடுத்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களது வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில், அங்கிருந்த ஏராளமான பெயர் எழுதப்படாத சான்றிதழ்கள், அதை தயாரிக்கப் பயன்படுத்திய லேப்டாப், பிரிண்டர், போலி முத்திரை, போலி அடையாள அட்டைகள், செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து,  , இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை உத்தரவிட்டது. அதன்படி இந்த ஆவணங்களை ஆய்வு செய்த கடலூர் மாவட்ட சிபிசிஐடி பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், போலி மருத்துவ சான்றிதழ் விவகாரத்தில் பின்புலமாக செயல்பட்டு வந்தது  , அகில இந்திய சித்த மருத்துவ சங்க மாநில தலைவராக உள்ள திருச்சியைச் சேர்ந்த சுப்பையா பாண்டியன்  என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.   திருச்சியில் உள்ள சுப்பையா பாண்டியன் வீட்டில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பாரம்பரிய வைத்தியரான சுப்பையா பாண்டியன், அவரது மனைவி பெயரிலும் போலி சான்றிதழ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரது வீட்டில் 10க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ் இருந்தது.

இதனையடுத்து சுப்பையா பாண்டியனை கைது செய்த போலீசார், கடலூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில்,  முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் போலி சான்றிதழ்கள் மூலம் ஏராளமானோர் சித்த மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சித்த மருத்துவம் பார்த்து வந்த 100க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி, அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாரம்பரிய சித்த வைத்தியரான சுப்பையா பாண்டியன் மூலம் சான்றிதழ் பெற்றது தெரிந்தது.

திருச்சியில் சித்த மருத்துவர்கள் மாநாடு: அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரை (youtube.com)