டெல்லி
மத்திய அரசு திருப்பதி லட்டு கலப்படம் குறித்து திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
ஆந்திராவில் முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில்,திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இது, குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
ஆய்வு அறிக்கையில், திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெய் லட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தரம் சரியில்லை என கூறியதையடுத்து, நெய்யை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனை முடிவில் தமிழகத்தில் இருந்து சப்ளை செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தின் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
எனவே அந்த நெய்யை வினியோகம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். டைரி நிறுவனத்தை தடுப்பு பட்டியலில் வைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்தது. திண்டுக்கல்லில் உள்ள அந்த நிறுவனத்தில் மத்திய அரசின் உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் அங்கிருந்து சில மாதிரிகளை எடுத்துச் சென்றனர். மத்திய அரசு அந்த நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிலைகள் ஒழுங்குமுறை விதிகளை மீறியதற்காக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்டு நோட்ஸ் அனுப்பி உரிய விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளது.