சென்னை: கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு தொடர்பாக வழக்கை தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு வாபஸ் பெற சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி  அளித்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க உச்ச நீதி மன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியின்போது ஓமந்தூரார் வளாகத்தில் கட்டப்பட்  புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு தொடர்பான வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்ற நிலையில், அதை எதிர்த்து அ.தி.மு.க முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கடந்த அ.தி.மு.க அரசின் போது ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசினுடைய உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய அ.தி.மு.க சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்த நிலையில் புதிய தலைமைச்செயலக கட்டட முறைகேடு தொடர்பாக அளிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை வாபஸ் பெற அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் எதிர் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற திபதிகள், வழக்கை வாபஸ் பெற தமிழக அரசு முடிவெடுத்துள்ள நிலையில், வழக்கை நடத்தும்படி நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது என கூறி வழக்கு வாபஸ் பெறப்பட்டதை ஏற்றுக் கொண்டனர்.

வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் இடையீட்டு மனுதாரரின் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லாததால் ஜெயவர்தன் மனுவை முடித்துவைத்தும் சென்னை உயர்நீதிமன்றம தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு வழக்கை திரும்பப் பெற அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி ஜெயவர்தன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்துள்ளார். அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே, புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு புகார் தொடர்பான மேல்முறையீடு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என ஜெயவர்தன் மனுவில் கூறியுள்ளார். இந்த மேல்முறையீடு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் மாநில முதலமைச்சராக மறைந்த கருணாநிதி இருந்தபோது, திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி திறக்கப்பட்டது.

அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் 2011 டிசம்பரில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையத்தை கலைத்து உத்தரவிட்டது. இந்த முறைகேடு தொடர்பாக சேகரித்த ஆதாரங்களை புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கவும், ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும், கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில், இதுதொடர்பாக விசாரணை நடத்த அனுமதி அளித்து 2018-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து முக ஸ்டாலின், துரைமுருகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில்  இருந்தன.

இந்த நிலையில், இதே விவகாரம் தொடர்பாக 2018-ம் ஆண்டு செப்டம்பரில் பொதுத்துறைக்கு புகார் அளித்ததாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள திமுக, இந்த வழக்கில் விசாரணை நடத்த அக்கறைகாட்டவில்லை. எனவே, 2018-ம் ஆண்டு நான் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும். அரசின் மேல்முறையீட்டு வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, அரசியல் நோக்கத்துக்காக மனுதாரரால் இந்த புகார் அளிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை விசாரணை நடத்தியும், லஞ்ச ஒழிப்பு துறையால் எந்த ஆதராமும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தினகரன், அரசியல் என்பது தம்முடைய தொழில் அல்ல. தாம் ஒரு மருத்துவர் என்ற அடிப்படையிலேயே புகார் அளித்தேன். லஞ்ச ஒழிப்புத் துறை பச்சோந்தி போல செயல்படுவதாக உயர் நீதிமன்றமே தெரிவித்துள்ளது என்று கூறினார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

அரசியல் காரணங்களுக்காக அரசு எடுக்கும் முடிவுகளால் மக்களின் வரிப்பணம் பெரிதும் வீணடிக்கப்படுகிறது என அதிருப்தி தெரிவித்தார். புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியதில் மக்களின் பணம் பெரிதும் வீணடிக்கப்பட்டதோடு, அதில் முறைகேடு நடந்ததாகக் கூறி அதனை விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டதில் 5 கோடி ரூபாய் மேலும் செலவழிக்கப்பட்டது என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இப்படி தன்னுடைய வரிப்பணம் வீணடிக்கப்படுவது குறித்து கேள்வியெழுப்ப ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு எனக் கூறிய நீதிபதி, தி.மு.க. தரப்பினர் தங்கள் மனுவைத் திரும்பப் பெற அனுமதியளித்தார். இதற்குப் பிறகு இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அதிமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]