கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
இலங்கையின் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசா, ஜனதா விமுத்தி பெரமுனா தலைவர் அனுரா குமாராவும் களத்தில் உள்ளனர். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச மற்றும் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். மொத்தம் அதிபர் தேர்தலில் 38 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில் இரவு 7 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். என தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்க வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த பின்வரும் ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டின் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு,செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், பொது சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை போன்றவை செல்லும் என்றும், மேலும், தேசிய அடையாள அட்டை தகவலை உறுதிப்படுத்தும் கடிதம், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை, ஏனைய நபர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை மேற்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட 9 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க முடியும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருப்பதற்காகவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடத்தும் வகையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த தேர்தலுக்காக மொத்தம் 13,400 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 1 கோடியே 70 இலட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
[youtube-feed feed=1]