சென்னை: ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக  அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டிய நிலையில், அதன்பேரில் தமிழ்நாடு அரசின்  லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்போது அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அப்போது,   பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. 2011-16-ல் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி கொடுக்க  ரூ.26.90 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி, வழக்கு பதிவு செய்ய  அனுமதி கோரியிருந்தது. அதன்பேரில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்,  அவரது 2 மகன்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள பதிவில், 2015-16 வருடங்களில் அதிமுக முன்னாள் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தி லிங்கம் கட்டிட அனுமதி கொடுக்க 28 கோடி லஞ்சம் வாங்கியதாக அறப்போர் ஆதாரங்களுடன் கொடுத்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு செய்தது என தெரிவித்துள்ளது.