திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர அரசிடம் அறிக்கை கேட்டுள்ள மத்திய அரசு அறிக்கையை தொடர்ந்து இதுகுறித்து FSSAI விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்துவது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.
திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சை வலுத்து வருகிறது.
உலக உணவு ஒழுங்குமுறை மாநாட்டையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஆந்திர முதல்வர் என்ன கூறியிருந்தாலும் அது மிகுந்த கவலையளிக்கிறது. விரிவான விசாரணை தேவை, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கும் பதிலளித்துள்ளார். திருப்பதி பிரசாத விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று நான் கருதுகிறேன் என்றார்.
பிரசாதத்தில் பயன்படுத்தப்படும் நெய்க்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்பதை சிபிஐ விசாரிக்க வேண்டும்? மேலும், இந்து மதத்தை அழிக்க சதி நடக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறிய கிரிராஜ் சிங் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்.
மத்திய அமைச்சர்களின் கருத்தை அடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா ஆந்திர அரசிடம் இருந்து விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.
இந்த அறிக்கையை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆய்வு செய்து முழு விசாரணை நடத்தப்படும் என்று கூறிய சுகாதார அமைச்சர் நட்டா இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
திருமலை லட்டு சர்ச்சையில் புதிய திருப்பம்… ஆந்திர உயர்நீதிமன்றத்தில் YSRCP வழக்கு தொடர்ந்தது…