FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 7வது சுற்று ஆட்டங்களில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

ஆடவா் பிரிவில் இந்தியா-சீனாவும், மகளிா் பிரிவில் இந்தியா-ஜாா்ஜியாவும் 7ஆவது சுற்றில் மோதின.

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இரு பிரிவிலும் இந்திய அணிகள் ஏற்கனவே 6 சுற்று ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

சீனாவுடனான 7வது சுற்றில் இந்திய ஆடவர் அணி 3 போட்டிகளில் டிரா செய்தது, ஒரு போட்டியில் வெற்றி பெற்றது.

இந்த சுற்றில் சீனாவைச் சேர்ந்த உலக சாம்பியன் டிங் லிரென் உடன் இந்திய அணியின் குகேஷ் மோதுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வீ யி (Wei Yi)யை எதிர்த்து குகேஷ் விளையாடினார்.

முந்தைய சுற்றில் வியட்நாமின் லெ குவாங் லியமிடம் உலக சாம்பியன் டிங் லிரென் அதிர்ச்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த சுற்றில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

Wei Yi உடன் 6 மணி நேரம் நீடித்த போட்டியில் 80 நகர்த்தலுக்குப் பின் இந்தியாவின் குகேஷ் வெற்றிபெற்றார்.

பிரக்ஞானந்தா, அா்ஜுன் எரிகைசி, ஹரிகிரிஷ்ணா ஆகியோர் இந்த சுற்றில் டிரா செய்த நிலையில் குகேஷின் இந்த வெற்றி மூலம் 2.5 புள்ளிகள் பெற்ற இந்தியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. சீனா 1.5 புள்ளிகள் பெற்றது.

அதேபோல் மகளிர் பிரிவில் ஜார்ஜியா அணியை இந்திய அணி வீழ்த்தி தொடர்ந்து 7 சுற்றுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

புள்ளி பட்டியலில் இரு பிரிவிலும் தலா 14 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

இந்திய ஆடவர் அணி 8வது சுற்றில் ஈரானை எதிர்த்து விளையாட உள்ளது. புள்ளி பட்டியலில் ஈரான் 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் மேலும் நான்கு சுற்று ஆட்டம் எஞ்சி உள்ள நிலையில் இந்திய அணி தங்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த முறை நடைபெற்ற உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.