சென்னை: மதுஒழிப்பு குறித்தும், ஆட்சியில் பங்கு குறித்தும் வீராவேசமாக பேசிய விசிக தலைவர் திருமாவளவன், இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, விசிகவின் மதுஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கும் என்று கூறினார்.

 

விசிக தலைவர் திருமாவளவன் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை  சந்தித்து பேசினார். அப்போது விசிக மகளிர் அணியினர் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தபோது, முதலமைச்சர் ஸ்டாலின்  அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பியதற்காக அவரை சந்தித்து  வாழ்த்து, பாராட்டு தெரிவித்தேன் என்று கூறியதுடன்,  அமெரிக்கா சென்று பல்லாயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து வந்துள்ள முதலமைச்சருக்கு விசிக சார்பில் வாழ்த்து தெரிவித்தோம் என்றார்.

 மதுவிலக்கு தொடர்பான தேசிய கொள்கையை மத்திய அரசு உருவாக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ஸ்டாலினிடம் கூறியதாகவும்,   நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றவர், விசிக நடத்தும் மதுஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கும் என முதலமைச்சர் உறுதி அளித்ததாக கூறினார்.

விசிகவின் மதுஒழிப்பு  மாநாட்டில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்பார்கள் என முதலமைச்சர் கூறியதாக தெரிவித்து திருமா,  நாட்டில் பூரண மதுவிலக்கு தேவை என்ற கருத்து திமுகவுக்கும் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார் என்றார்.

தொடர்ந்து பேசியவர், இந்த விவகாரம்,  கட்சிக்கான பிரச்சனையோ, கூட்டணிக்கான பிரச்சனையோ அல்ல. மதுவிலக்கு என்பது நாட்டுக்கான பிரச்சனை என்று கூறியதுடன்,   மதுவிலக்கு மாநாட்டையும் அரசியல் கூட்டணியையும் முடிச்சுப்போட வேண்டாம் என்று ஜகா வாங்கியதுடன், ஆட்சியில் அதிகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடன் கேள்விக்கு பதில் கூறியவர்,   அதிகார பகிர்வு குறித்து முதலமைச்சரிடம் பேசவில்லை என்றவர், இதன் காரணமாக,  திமுக மற்றும் விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்றவர்,  2026 தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன என்று கூறிவிட்டு சென்றார்.

இந்த விவகாரம் பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்து வரும் சூழலில்,  முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்பதற்கு முன்பு  செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளோம். மத்திய அரசை தி.மு.க.வும் வலியுறுத்த வேண்டும் என்பதால் முதல்-அமைச்சரை சந்திக்க இருக்கிறேன். அ

ரசியலுக்காக மதுவிலக்கு மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தவில்லை. முதலமைச்சருடனான சந்திப்பின்போது, மதுவிலக்கு மாநாடு குறித்து ஆலோசிப்போம், மாநாட்டிற்கு அழைப்பும் விடுப்போம்.. இந்த மாநாட்டில்,  அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு நேரில் அழைப்பு விடுப்பது குறித்து இரண்டொரு நாட்களில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

மதுவிலக்கு மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி கையில் எடுப்பதால் கூட்டணியில் விரிசல் வந்தாலும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். தற்போது தி.மு.க. கூட்டணியில் இருப்பதாகவே நான் நம்புகிறேன். மதுவிலக்கை பேசுவதால் எந்த விளைவுகள் வந்தாலும் எதிர்கொள்ள தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் முதலமைச்சரை சந்தித்த பிறகு, அவரது பேட்டி முற்றிலும்  மாறிவிட்டது.

திருமாவளவனின் வீரா வேசகம் ஒருசில மணி நேரங்களே. நேரில் பார்க்கும்போது திமுகவிடம் சரண்டர் ஆவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.  அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா….