சென்னை: ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே 8 சிறப்பு ரயில்களை  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விடுமுறை காலங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் தெற்கு ரயில்வே பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன்படி, தற்போது வரவிருக்கும் ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது.

 ஓணம் பண்டிகை கேரளா மாநிலத்தில் 10 நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.  இந்த ஆண்டு வயநாடு நிலச்சரிவு காரணமாக சிறப்பாக கொண்டாடப்படாது என அறிவிக்கப்பட்டாலும், ஒணம் பண்டிகை களைக்கட்டி உள்ளது.  இதையொட்டி,  வெளி மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு செல்ல தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

அதன்படி செகந்திராபாத்தில் இருந்து வருகின்ற 13ம் தேதி (வெள்ளி) மாலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில் குண்டூர், காட்பாடி, சேலம், கோவை, கோட்டயம் வழியாக மறு நாள் இரவு 11.20 மணிக்கு கொல்லத்திற்கு சென்றடையும். அதே போன்று மறு வழிதடத்தில் 15ம் தேதி (ஞாயிறு) அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு திங்கள் கிழமை காலை 10.30 மணிக்கு செகந்திரபாத் சென்றடைகிறது.

கர்நாடகா மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையத்தில் இருந்து 13ம் தேதி காலை 6.55 மணிக்கு புறப்படும் ரயில் அர்சிகெரே, பங்காரப்பேட்டை, சேலம், கோவை, கோட்டயம் வழியாக மறு நாள் காலை 6.45 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தை அடைகிறது. மறு மார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து 14ம் தேதி (ஞாயிறு) பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு அதே பாதையில் மறு நாள் பகல் 12.50 மணிக்கு மீண்டும் ஹூப்ளி ரயில் நிலையத்தை அடைகிறது.

இதே போன்று தீபாவளி மற்றும் ஆயுத பூஜைக்கான சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி கொச்சுவேலியில் இருந்து நிஜாமுதீனுக்கு வருகின்ற 20, 17, அக்டோபர் 4, 11, 18, 25, நவம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் பகல் 2.15 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் கோட்டயம், கோவை, காட்பாடி, விஜயவாடா, நாக்பூர், குவாலியர் வழியாக நிஜாமுதீனுக்கு ஒரு நாள் கழித்து இரவு 8.40 மணிக்கு சென்றடைகிறது. இதே போன்று மறு வழிதடத்தில் திங்கள் கிழமைகளில் அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடத்தில் புதன் கிழமைகளில் பகல் 12.53 மணிக்கு கொச்சுவேலி சென்றடைகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செப்டம்பர் 21, 28, அக்டோபர் 5, 12, 19, 24, நவம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (சனி) இரவு 11.45 மணிக்கு புறப்படும் ரயில் விஜயவாடா, புவனேஷ்வர், பாலசோர் வழியாக சந்திராகாஜிக்கு திங்கள் கிழமை காலை 7.15 மணிக்கு சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் சந்திராகாஜியில் இருந்து திங்கள் கிழமை காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் அதே வழித்தடத்தில் செவ்வாய் கிழமை பகல் 3.30 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைகிறது.

தீபாவளி, ஆயுத பூஜைக்காக அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வியாழன் கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஓணம் பண்டிகைக் காக இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.