சென்னை:  குரோம்பேட்டையில் பகுதியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளை நிறுவனமான  எம்ஐடி கல்லூரிக்கு இன்று மீண்டும்  வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 6ந்தேதியும் இந்த கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(எம்ஐடி) செயல்பட்டு வருகிறது.  இன்று காலை வழக்கம்போல பணிகள் தொடங்கி ய நிலையில்,   எம்ஐடி கல்லூரியில் வெடிகுண்டு இருப்பதாகஅண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் வந்துள்ளது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் உடனடியாக தாம்பரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றம் மோப்ப நாய்களுடன் குவிந்த  காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் மாணவர்கள் மத்தியில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி. (M.I.T.)   கல்லூரிக்கு  கடந்த மார்ச் மாரதம் 6ந்தேதி இதேபோன்று ஒரு மிரட்டல் வந்தது.  (06.03.2024) அந்த மின்னஞ்சலில் அன்றைய தினம்  வெடிகுண்டு வெடிக்கம்  மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் சோதனை நடத்தப்பட்டதில் புரளி என்பது தெரிய வந்தது.

சென்னையில்  கடந்த சில மாதங்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே  தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும்  கல்லூரி, பள்ளிகள் மற்றும் கோவில்களுக்கு  அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்களும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைகழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!