டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செப்டம்பர் 7ம் தேதி வந்திறங்கிய 1556 கிலோ இறைச்சி குறித்து ரயில்வே அதிகாரிகள் கொடுத்த தகவலை அடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதனை குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று அழித்தனர்.

அதேபோல் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த சுமார் 1600 கிலோ இறைச்சியும் இதேபோல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் ஆயிரக்கணக்கான கிலோ ஆட்டிறைச்சி எங்கிருந்து யாருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவல் இல்லாமல் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அனாமதேயமாக டன் கணக்கிலான சரக்குகள் ரயிலில் வந்தது குறித்த தகவல் மட்டுமே கிடைக்கப்பெற்ற உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் துர்நாற்றம் வீசிய அந்த இறைச்சிகளை கைப்பற்றி ரயில் நிலையத்தில் இருந்து அகற்றி கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு அனுப்பி அழித்தனர்.

டெல்லி மற்றும் ஜெய்ப்பூரில் இருந்து இதுபோன்று டன் கணக்கிலான இறைச்சி தமிழ்நாட்டு ரயில் நிலையங்களில் வந்திறங்குவதும் அவை அனைத்தும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள உணவகங்களில் விற்கப்படுவதாகவும் வெளியான தகவலை அடுத்து மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில், குளீரூட்டப்பட்ட (Cold Storage) சரக்கு போக்குவரத்துப் பெட்டிகள் இல்லாத ரயில்களில் எந்தவித விநியோக சங்கிலி மேலாண்மை (Supply Chain Management) வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் அசைவப் பிரியர்களை பீதியில் ஏற்படுத்தும் இந்த அனாமதேய இறைச்சி கூடங்கள் குறித்தும் அவற்றை ரயில்வே நிர்வாகம் எப்படி அனுமதித்தது என்பது குறித்தும் ரயில்வே மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சென்னையில் உள்ள ஆட்டிறைச்சி கடைகளில் மாநகராட்சி ஆடுதொட்டி இறைச்சி கூடங்களில் வெட்டப்பட்டதற்கான சான்று உள்ளதா என்பது குறித்தும் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.