சென்னை: வணிகர்களின் காவலனாக இருந்து வரும் வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளயன் (வயது 76) உடல்நலம் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள வணிகர்களின் குரலாக , சாதி, மத, அரசியல் பேதமின்றி செயல்பட்டு வருபவர் வெள்ளையன். இவரது வணிகர் சங்க பேரவை மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. வயது முதிர்வு காரணமாக, பல்வேறு உடல்நலப் பாதிப்புக்கு ஆளான நிலையில், கடந்த ஒரு வருடமாக வணிகர் சங்க நிகழ்ச்சிகளில் அதிக அளவில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்தார். மேலும் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்ற வந்தார்.
இந்த நிலையில், கடந்த கடந்த 3-ம் தேதி திடீரென மூச்சுவிடுவதில் சிக்கல் ஏற்பட்டதால், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அமைந்தக்கரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால், அவருக்குநுரையீரல் தொற்று அதிகமான நிலையில், அவரை மருத்துவர்கள், கடந்த 5-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் மருத்துவர் ஆனந்த் மோகன் பாய் செய்தி வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘த.வெள்ளையன் நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.