டெல்லி: ரூ.2,000 வரையிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி  விதிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த விவகாரம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

அடித்தட்டு மக்கள் மற்றும் சாமானிய மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள டிஜிட்டல் பண பரிவர்த்தனையில்,  ரூ.2000ம் வரையிலான  டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18சதவீத ஜிஎஸ்டி விதிக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவின.  இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மற்றும் பல மாநில அரசுகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிபத்தன.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற  54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் – ₹2,000-க்கும் குறைவான பரிவர்த்தனைகளின் மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு, 18% சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலிக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் சாமானிய மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54-வது ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து மாநில நிதித்துறை அமைச்சர்களும், மத்திய நிதித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், ரூ. 2,000 வரையில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிப்பது குறித்து மத்திய அரசு கருத்து கேட்டது. இந்த நடைமுறை அமல்ப்படுத்தப்பட்டால் சிறிய அளவிலான பரிவர்த்தனை செய்யும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உறுப்பினர்கள் கூறியதால், இறுதி முடிவு எடுக்காமல் பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகளுக்காக நிர்ணயக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

இந்த குழுவானது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வரி விதித்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து ஜிஎஸ்டி குழுவுக்கு அறிக்கையை சமர்பிக்கும்.