உ.பி. மாநிலம் கான்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் எல்.பி.ஜி. சிலிண்டரை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது.

அலகாபாத் முதல் ஹரியானா மாநிலம் பிவானி வரை செல்லும் காளிந்தி விரைவு ரயில் வழக்கம் போல் நேற்றிரவு சென்றது.

வழக்கமான வேகத்தில் ரயில் சென்றுகொண்டிருந்த நிலையில் ரயில் தண்டவாளத்தில் சந்தேகத்திற்கு இடமாக ஏதோ ஒரு பொருள் இருப்பதை ரயிலின் ஓட்டுநர் கவனித்தார்.

இதனால் சுதாரித்த ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். ஆனால் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் மீது மோதி ரயில் நின்றது.

ரயில் மோதிய வேகத்தில் தண்டவாளத்தில் இருந்து சிலிண்டர் தூக்கி வீசப்பட்டது.

இதுகுறித்து ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

தடயவில்லை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரயில் தண்டவாளம் அருகே தூக்கி வீசப்பட்ட சிலிண்டரை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளதாகக் கூறிய போலீசார் 6 தனிப்படைகளை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.