சென்னை; தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மஸ்கோத் அல்வாக்கு பெயர் பெற்றுள்ள முதலூர் பகுதியில்  வழிப்பாட்டுதலம் அருகில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் 3 மாதத்திற்குள் டாஸ்மாக் கடையை அகற்ற  உயர் நீதிமன்றம் மதுரை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மேலும்,  “பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே மதுபான கடைகளை அமைப்பது ஏன்?” -அரசுக்கு ‘கேள்வி எழுப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அருகே உள்ள கடாச்சபுரத்தைச் சேர்ந்த ஞானமுத்து என்பவர்  உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் டாஸ்மாக் கடை தொடர்பாக மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது   மனுவில், ‘சாத்தான்குளம் தாலுகா முதலூர் பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு தலம் மற்றும் அம்மன் கோயில் அமைந்துள்ளது. அந்த பகுதியில் அரசு டாஸ்மாக் கடையை திறந்துள்ளது.  வழிப்பாட்டு ஸ்தலங்கள்  இருக்கும் நிலையில்,  100 மீட்டர் தொலைவுக்கு உள்ளாக, மக்களின் எதிர்ப்பை மீறி  டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, ஊராட்சிமன்ற கூட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றம்  டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்ட நிலையில், ஏற்கெனவே கடை அமைந்த இடத்திற்கு எதிர்ப்புறத்தில் கடை திறந்துள்ளனர். இது நீதிமன்ற அவமதிப்பாகும்.  வழிபாட்டுத் தலங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் டாஸ்மாக் கடைகளை அமைப்பது சட்டவிரோதமானது. எனவே தூத்துக்குடி மாவட்டம் முதலூர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை உயர்நீதிமன்ற மதுரை கிளை  நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி முகமது சபிக் அமர்வில்  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்  அரசை கடுமையாக கண்டித்துடன்,   “பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகில் உள்ள இடங்கள் மதுபான கடைகளை வைப்பதற்காக தேர்வு செய்யப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  முதலூரில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடை  “6 மாதங்களுக்குள்ளாக அங்கிருந்து  அகற்றப்படும்” என தெரிவித்தார்.   அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “வழக்கு தாக்கல் செய்யப்படும் போது டாஸ்மாக் கடை அந்த பகுதியில்  திறக்கப்படவில்லை. தற்போது திறக்கப்பட்டுள்ளது  எப்படி என கேள்வி எழுப்பியதடுன்,   3 மாதங்களுக்குள்ளாக டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.