இம்பால்: கட்சி தாவும் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம்  வழங்கப்படக்கூடாது என்று  இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் அரசு, அதிரடி சட்ட திருத்தத்தை கொண்டு மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இது இனிமேல் கட்சி தாவலை தடுக்கும் என நம்பப்படுகிறது.

இதன் காரணமாக,  “இனி எம்எல்ஏக்கள் தங்களது சுயலாபத்துக்காக  கட்சி தாவினால் , கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யப்படும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது”  என்ற புதிய சட்டத்திருத்த மசோதா  இமாச்சல் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில்   முதல்வர் சுக்விந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆறு  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்காமல் விலகியதன் காரணமாக கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இது  சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், வரும் காலங்களில் இதுபோன்ற கட்சி தாவல்களை தடுக்கும் வகையில், புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.  , இந்த சட்டத்தினை இமாச்சல் பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். தொடர்ந்து அரசியலமைப்பு மீறல்களைத் தடுக்க, மக்களின் ஆணையைப் பாதுகாக்க, மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்காக இது அறிமுகம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதாவது,  இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவை (உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம்) திருத்த மசோதா 2024, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவால் அறிமுகப்படுத்தப்பட்டு   சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என புதிய சட்டம் குறிப்பிடுகிறது.

இந்த சட்டம் பேரவையில்  நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், விரைவில் கவர்னர் ஒப்புதல் பெற்று, குடியரசுதலைவரின் அனுமதி பெறப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் பிற கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ,க்கள் விலை போவதும், குதிரை பேரம் நடைபெறுவதும் தடுக்கப்படும். அதுபோல, மக்கள் ஆதரவு பெற்று ஆட்சியை அமைக்கும் எந்தவொரு மாநில அரசையும் கவிழ்க்கும் திட்டமும் தடுக்கப்படும் என நம்பப்படுகிறது.

Singapore.