பியோங்யாங்:  வடகொரியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில்  சிக்கி 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், முறையாக வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கடமை தவறிய அரசு ஊழியர்களை 30 பேருக்கு  அந்நாட்டு அரசு   மரண தண்டனை விதித்துள்ளது. இந்த அறிவிப்பை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வடகொரியாவில்,  வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 1,000 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், கடமையை செய்ய தவறிய  30  அரசு அதிகாரிகளை தூக்கிலிட வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரிய நாட்டில்,  கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி  சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர்  மேலும், 15,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர். மேலும்,  வட ஃபியோங்கன் மாகாணத்தின் வடக்கு எல்லை நகரமான சினுய்ஜு மற்றும் உய்ஜு கவுண்டியில் பெய்த கனமழையால் 4,100 வீடுகள், 7,410 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் பல பொது கட்டிடங்கள், கட்டமைப்புகள், சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை சுமார் 1000ஐ தாண்டும் என்று தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிபர்  கிம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க உய்ஜு மாவட்டத்திற்குச் சென்று ஆதரவை வழங்கினார் என்று  அந்நாட்டு ஊடகமான KCNA தெரிவித்துள்ளது. அடுத்து, வெள்ள பாதிப்புகளைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு  அதிபர் கிம் உத்தரவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து நடத்தபட்ட விசாரணையில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரிய வந்தது. இதையடுத்து,  வெள்ளத்தை தடுக்க ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் மற்றும் கடமை தவறியதாக குற்றம் சாட்டப்பட்ட சுமார் 20 முதல் 30 தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று வட கொரிய அதிகாரியை மேற்கோள் காட்டி டிவி சோசன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோல், வெள்ளம் பாதித்த பகுதியில் சுமார் 20 முதல் 30 பணியாளர்கள் கடந்த மாத இறுதியில் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டனர் என்று அந்த அதிகாரி தொலைக்காட்சி நெட்வொர்க் ஊடகத்திடம்  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதிபரின் உத்தரவுப்படி கடந்த மாத இறுதியில் ஊழல் மற்றும் கடமை தவறிய அரசு அதிகாரிகளாக 30 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக தென்கொரியாவின் சோசன் டிவி உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் வட கொரியா தரப்பில் எதுவும் கூறப்படவில்லை. முன்னதாக வட கொரிய வெள்ளத்தில் அதிக மக்கள் உயிரிழந்துள்ளதை மறுத்த அதிபர் கிம் ஜாங் உன் இவை வட கொரியாவின் சர்வதேச பிம்பத்தைச் சிதைக்கத் தென் கொரியா பரப்பும் வதந்திகள் என்று மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.