கோயமுத்தூர்: கோவை சூலூர் அருகே உள்ள தனியார் கார் ஷோரூமில்  இன்று  அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள  சுமார் 15-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே  தனியாருக்கு சொந்த மாருதி ஷோரூம் செயல்பட்டு வருகிறது. சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் திருச்சி சாலையில்  உள்ள அந்நிறுவனம்,   புதிய கார் விற்பனை மற்றும் பழைய கார்கள் பழுது நீக்கும் பணிகளையும் மேற்கொண்டு  வருகிறது.  இந்த ஷோரூமில், இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இதுகுறித்து காவலாளி, தீயணைப்பு துறையினருக்கும், கார் நிவாகத்தினருக்கும் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதுடன், கார் நிர்வாகத்தினர், அருகே இருந்த கார்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.  அப்போது கட்டடத்தின் மேல் கூரை இடிந்து விழுந்தது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து நாசமானது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அருகே உள்ள கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர்  மற்றும் ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ஷோரூம்க்குள் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கார்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தி‘ பாதுகாத்தனர்.

 இந்த தீ விபத்தில் கார்கள் பழுது நீக்கும் பகுதி மற்றும் கார் விற்பனை பிரிவு உதிரி பாகங்கள் அறை, கணினி அறை ஆகிய பகுதிகளுக்கும் தீ பரவி எரிந்து நாசமானது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள சூலூர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. தீ விபத்துக்கான காணம் குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இரவு நேரம் என்பதால் ஊழியர்கள் யாரும் அங்கு இல்லாத காரணத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீயினால் கட்டடம் இடிந்து விழுந்ததில் குடியிருப்புப் பகுதியில் வாசிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. தற்போது இடிந்த பகுதிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சூலூர்  உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திருச்சி சாலை பகுதியில் போக்குவரத்தை மாற்றி அந்த வழியை ஒரு வழி பாதையாக மாற்றினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.