தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் உரத்தொழிற்சாலையில் அமோனியா வாயு வெளியேறி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பகுதியில் ஹார்பர் எக்ஸ்பிரஸ் ரோட்டில் தனியார் உரத்தொழிற்சாலை (டாக் – தூத்துக்குடி அல்கலி கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைஷர்ஸ் லிமிடெட்) தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தனியார் உரத்தொழிற்சாலைக்குச் சொந்தமான துணை நிறுவனத்தின் தொழிற்சாலையில் சோடா ஆஸ் மற்றும் அமோனியம் குளோரைடு ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த ஆலையில் உள்ள அமோனியா பைப்லைனில் பிரச்சினை ஏற்பட்டள்ளது. அதை சரிசெய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகளை அருகே உள்ள பகுதியான மஞ்சள் நீர் காயல் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன், தன்ராஜ், மாரிமுத்து விஷ்ணு, ஹரி பாஸ்கர் ஆகிய ஊழியர்கள் மேற்கொண்டு வந்தனர்.
அப்போது திடீரென அம்மோனியா வாயு அதிக அளவு கசிந்து ஏற்பட்ட விபத்தில் ஹரிகரன் சம்பவ இடத்தில் பலியானர். மேலும் தனராஜ், மாரிமுத்து, விஷ்ணு, ஹரி பாஸ்கர், ஆகியோர் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்கள் ஆலைபகுதியில் குவிந்தனர். மேலும் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, இறந்தவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அங்கு வந்த
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மற்றும் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமணியம் ஆகியோர் ஆலைக்குள் சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் அந்த பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டள்ளது. அதனால் தொழிற்சாலைக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.