தர்மபுரி மாவட்டம், தகட்டூர், அருள்மிகு மல்லிகார்ஜூனேசுவரர் ஆலயம்.

பூமியில் வாழும் சகல உயிரினங்களும், வான் மண்டலத்தில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் நவகிரகங்களும் கால சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவை. காலத்தைக் கட்டுப்படுத்தி துன்பப்படும் மனிதர்களுக்கு நன்மை செய்யும் கருணை தெய்வம் காலபைரவர். சனிக்கு குருவானவர். இருவருக்குமான தொட்பு பற்றி புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. சூரிய பகவானுக்கும், அவர் மனைவி உஷாதேவிக்கும் பிறந்தவன் எமன். ஒருகட்டத்தில் சூரியனின் வெம்மை தாங்காமல் கடும் அவதிக்குள்ளானாள் உஷாதேவி.

எனவே, தன் நிழலாக தன்னைப் போலவே பிரத்யுஷா என்னும் சாயா தேவியை உருவாக்கி தம் பணிகளைச் செய்யுமாறு பணித்து சூரியனை விட்டு விலகியிருந்தாள். உஷாதேவி, சாயாதேவி ஆகிய இருவரின் உருவ ஒற்றுமையும் நடவடிக்கைகளும் ஒன்றாகவே அமைந்திருந்ததால் சூரியனுக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.

சூரியபகவான் மீது சாயாதேவி கொண்ட பக்தியால் மந்தன் என்னும் சனி பிறந்தார். அதன் பிறகு எமனை அலட்சியம் செய்ய ஆரம்பித்தாள், சாயாதேவி. அதைப் பொறுத்தக்கொள்ள முடியாத எமன் தன் தந்தையான சூரியபகவானிடம் முறையிட, அவர் ஞானதிருஷ்டியால் உண்மையை அறிந்துகொள்கிறார்.

பின்னர் சாயா தேவியை விட்டு விலகிவிடுகிறார்.  தேவரினமே ஆனாலும் நிழலானவரின் மகன் என்பதால் சனியை யாரும் லட்சியம் செய்யவில்லை. அதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த சனியை நாரதர் சமாதானப்படுத்தினார்.  சனியிடம் பைரவரின் பெருமைகளைக் கூறி அவர் குறித்து தவம் செய்யச் சொன்னார். நாரதர் வாக்கை ஏற்று, கடும்தவத்தில் ஆழ்ந்தார் சனி. சனியின் தவத்தால் மகிழ்ந்த பைரவர், அவருக்கு நேரில் காட்சி தந்து, காலமாகப்பட்ட சூரியபகவானையும், காலனான எமனையும் தன் பார்வையால் கட்டுப்படுத்தியதோடு, சனியை சூரியமண்டலத்தில் தனிப்பெரும் சக்தியாக உருவாக்கினார்.

காலனையும், காலத்தையும் கட்டுப்படுத்தியதால் இவர் காலபைரவர் என்று அழைக்கப்படுகிறார். காலம் என்னும் சூரியன் உள்பட நவகோள்களும் இவரது ஆணைக்குக்கட்டுப்படுவர் என்பதால் நம் முன்னோர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே காலசக்ரவடிவில் 3 க்கு 3 வடிவ யந்திரம் அமைத்து, சக்ர வடிவில் புடைப்புச் சிற்பமாக நாய் வாகனத்துடன் காலபைரவரை பிரதிஷ்டை செய்துள்ள தலம் தர்மபுரி.

இங்குள்ள கோட்டை கோயிலில், குபேர பாகத்தில் கல்யாண காமாட்சியம்மன் சன்னிதிக்கு எதிரில் தனிச்சன்னிதியில் இவரை தரிசிக்கலாம். காலசக்கரத்தைக் கொண்ட தமிழகத்தின் மூத்த பாரம்பரியம் கொண்ட காவல்தெய்வமாக விளங்குகிறார்.

இருபத்தேழு நட்சத்திரங்களில் சித்திரை நட்சத்திரத்திற்குரியவர் இவரே. ஸ்ரீசக்கரத்தின் நடுவில் சூரிய, சந்திர, அக்னி ஜ்வாலையுடன் புடைப்புச் சிற்பமாக அருளும் இவர் சக்ர பைரவர், யந்திர பைரவர் என்றெல்லாம் சிறப்புப் பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

திருவிழா:

ஆடி மாதம் – ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம் – இத்திருத்தலத்தின் மிக சிறப்பான விழாவாகும். தவிர வெள்ளி சிறப்பு சந்தன காப்பு, பூப்பந்தல் சேவை ஆகியவை சிறப்பானவை.  தை மாதம் – சண்டி ஹோமம் – 2 நாட்கள் விழாமார்கழி மாதம் – சிறப்பு பூஜை விழாக்கள்வைகாசி – தேரோட்டம் , வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி உற்சவம் ஆகியவை இத்தலத்தின் சிறப்பான நாட்கள் ஆகும்.இத்தலத்தில் மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இரண்டரை டன் எடையுள்ள வியன்மிகு தொங்கும் தூண்கள் இரண்டைப் பெற்றிருக்கும் சிவத்தலம் இது. தாய்மையின் சிறப்பை உயர்த்திச் சொல்லும் வகையில் காமாட்சி அம்பாளின் சன்னதி சுவாமியின் சன்னதியை விட உயரமாக இருக்கிறது.

சுவாமி சன்னதியில் அஷ்டதிக்கு பாலகர்களை அற்புதமாக சிற்ப வடிவமாக்கி நம்மைக் கவரும் தலம். இத்தல விநாயகர் செல்வகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

நெடுமான் அஞ்சி உள்பட பல மன்னர்களால் வழிபடப்பட்டவர்.

பிரார்த்தனை:

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.  இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பெரும்பாலும் பிரார்த்தனை செய்கிறார்கள். கடன் தொல்லை தீரவும் இத்தலத்தில் வேண்டுகின்றனர்.

சனிபகவானின் குருநாதரான காலபைரவர் தன்னை நாடிவரும் பக்தர்களை ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனியால் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்களில் இருந்தும்; உடல்நல பாதிப்புகள், கடன்பிரச்னை, போன்ற குறைப்பாடுகளில் இருந்தும், பில்லி, சூனியம் போன்ற மந்திர பிரயோகத்தால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும் காப்பாற்றுகிறார்.

நேர்த்திக்கடன்:

இங்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக படிபூஜை செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாக உள்ளது. இங்குள்ள அம்பாளான காமாட்சி சந்நிதியில் உள்ள 18 படிகளும் மிகவும் விசேஷமானவை.இந்த 18 படிகளுக்கும் மலர்களால் அலங்காரம் செய்து 16 விதமான பொருட்களால் அபிஷேகம் செய்து 18 படிக்கும் மஞ்சள் குங்குமம் வைத்து, ஜவ்வாது சந்தனம் கலந்து பூசி, முக்கனிகள் படைத்து, புடவை சாத்தி வழிபடுகிறார்கள்.

தவிர சுவாமிக்கு தேன்,நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர்,பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள்.தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.அம்பாளுக்கு புடவை சாத்துகிறார்கள். பக்தர்கள் அன்னதானமும் செய்கிறார்கள்.

வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி சங்க காலத்தில் அவ்வைக்கு நெல்லிக்கனி வழங்கிய வரலாற்றுப் புகழ் பெற்ற தகடூர் தலம் இது. தகடூர் சுயம்பு லிங்க தலம் ஆகும். திருமாலின் நான்கு அவதாரங்களான யோக நரசிம்மர், ராமர், ஹயக்ரீவர், கிருஷ்ணர் ஆகியோரால் வழிபட்ட தலம். ஆதியில் பாணாசுரனால் ஸ்தாபிக்கப்பட்ட தலம் இது.

சுந்தரர், சம்பந்தர், அவ்வை, அரிசில் கிழார், பொன்முடியார், பரணர், கபிலர், நாகையார், அதியன், விண்ணத்தனார் முதலிய புலவர்களால் பாடி பணியப்பட்ட திருத்தலம்.  இங்குள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. தங்கக் கவசமும் சாத்தப்படுகிறது. இந்த வழிபாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு சகலமும் அருள்கிறார், சக்கர பைரவர்.

அமைவிடம்:

தருமபுரி நகருக்குள்ளேயே கோயில் இருப்பதால் பக்தர்கள் எளிதில் கோயிலுக்கு சென்று வரலாம்.