திருச்சி எஸ்.பி வருண்குமார், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்திலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல்துறையினரை தகாத வார்த்தைகளில் திட்டியதோடு அக்கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு, திருச்சி எஸ்.பி வருண்குமார் தான் காரணம் எனவும் பேசியிருந்தார்.

இதுதொடர்பாக சீமானுக்கு எஸ்.பி. வருண்குமார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யுமான வந்திதா பாண்டே மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் விதமாக பல்வேறு பதிவுகள் பதியப்பட்டுள்ளது.

இதனையடுத்து தனது குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் குடும்ப நலன் கருதி எக்ஸ் பக்கத்தில் இருந்து தானும் தனது மனைவியும் சில காலம் விலகி இருக்க முடிவெடுத்திருப்பதாக வருண்குமார் ஐ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் கடிதத்தில், சமூக வலைதளத்தில் பெண்களை ஆபாசமாக விமர்சனம் செய்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது காவல்துறை உயர்பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் குறித்தும் இதுபோன்ற அருவருக்கத்தக்க விமர்சனங்கள் பதியப்பட்டுள்ளது.

இந்த பதிவுகளை போட்டவர்களின் விவரங்கள் தெரிய வந்துள்ள நிலையில் அதில் பெரும்பாலோனர் வெளிநாடுகளில் இருந்துகொண்டு இதுபோன்ற வேலையில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் ஒரே கட்சியின் பின்புலத்தில் செயல்பட்டு வருவதும் அது அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இருவரின் தூண்டுதலின் பேரில் நடைபெற்றிருப்பதற்கான சந்தேகம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமூக வலைதளத்தில் இதுபோன்ற ஆபாச விமர்சனங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் சமூக வலைதளத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் தம்பிகளின் சேட்டைக்கு முடிவு கட்டப்படும் என்றும் காவல்துறை நடவடிக்கையில் இருந்து அவர்களது முப்பாட்டனாலும் அவர்களை காப்பாற்ற முடியாது என்று கூறப்படுகிறது.

சீமானுக்கு திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் நோட்டீஸ்