சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்குமாடி குடியிருப்பின் (JWA) சில பகுதிகளில் மேற்கூரை இடிந்து விழுந்து கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து இதனை இடித்துவிட்டு புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

இந்திய தொழில்நுட்ப கழகம் (சென்னை) (IIT-Madras) வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வை ஏற்று உயர்நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், கட்டிடத்தை இடிக்க சென்னை மாநகராட்சியிடம் இருந்து 1975ம் ஆண்டு முதலான வில்லங்க சான்று மற்றும் மொத்தமுள்ள 472 பிளாட் உரிமையாளர்களுடனான தனித்தனி விற்பனை பத்திரம் மற்றும் வங்கி கடன் பெற்றவர்கள் வங்கியில் இருந்து தடையில்லா சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜெயின் ஹவுசிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு ஆகஸ்ட் 7ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட ஜெயின் ஹவுசிங் நிறுவனம் சென்னை மாநகராட்சியின் இந்த மிகப்பெரிய மற்றும் நீண்ட ஆவண நடவடிக்கையால் கட்டிடம் கட்டுவதில் மேலும் காலதாமதம் ஏற்படும் என்று மனு அளித்தனர்.

இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், 472 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலன் கருதி, உயர்மட்ட கோபுரங்களை இடித்துவிட்டு, சொத்தை மீண்டும் மேம்படுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்தியது.

மேலும், இந்த குடியிருப்புகளுக்கான சொத்து வரி செலுத்தப்பட்ட ஆவணங்களை மட்டுமே சென்னை மாநகராட்சி கேட்டுப் பெறமுடியும் என்று தெளிவுபடுத்திய நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு கட்டுமான பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நீண்ட செயல்முறையை உருவாக்கக் கூடாது என்றும் சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை மிகவும் ஆச்சரியமாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.

அதேவேளையில் கட்டுமானப் பணியின் கூடுதல் பகுதியைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள பிரச்னை குறித்து விவாதிக்க ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்குமாடி குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் தனிப்பட்ட பிளாட் உரிமையாளர்கள் சார்பில் மற்றொரு மனு அளிக்கப்பட்டது.

ஜெயின்ஸ் ஹவுசிங் நிறுவனத்துக்கு எதிரான இந்த மனு மீதான விசாரணையில் குடியிருப்போர் சங்கம் சார்பாக ஏ.எல். சோமயாஜியும், தனிப்பட்ட உரிமையாளர் சார்பாக பி. வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள்.

தற்போது 7.3 லட்சம் சதுரடி கட்டப்பட்டுள்ள நிலையில் இடித்துவிட்டு புதிதாக கட்டப்பட உள்ள குடியிருப்பு, புதிய FSI விதிகளின்படி 9.5 லட்சம் சதுர அடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் கூடுதலாக கட்டப்படும் பகுதியை 80:20 என்ற விகிதத்தில் பகிர வேண்டும் என்று குடியிருப்போர் நல சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

ஆனால், ஜெயின்ஸ் ஹவுசிங் நிறுவனம் 65:35 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்ள முன்வந்துள்ளது.

இந்த நிலையில் ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை இடித்து விட்டு கட்ட நீதிமன்றம் அமைத்த இரண்டு நீதிபதிகள் கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்ள பரிந்துரைத்துள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக ஆகஸ்ட் 29ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று கூறினர்.

சென்னை வடபழனியில் உள்ள ஜெயின்ஸ் அடுக்குமாடி குடியிருப்பை இடித்துவிட்டு கட்ட வேண்டும்: IIT நிபுணர்கள் பரிந்துரை