டெல்லி: எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பாரத் பந்த் நடத்தப்படுகிறது.   நாளை (ஆகஸ்ட் 21ம் தேதி)  நாடு தழுவிய பாரத் பந்த் நடைபெறும் என பச்சாவ் சங்கர்ஷ் சமிதி அமைப்பு அறிவித்து உள்ளது. இதற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு கரம் நீட்டி உள்ளன.

உச்சநீதிமன்றம்,  பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதாவது, உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் ஆகஸ்ட் 1, 2024 அன்று ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதில் SC மற்றும் ST குழுக்களுக்குள்ளேயே துணைப்பிரிவுகளை உருவாக்க மாநிலங்களை அனுமதித்தனர். “உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.

இந்த முடிவு பரவலான விவாதத்தையும்,  விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் பச்சாவ் சங்கர்ஷ் சமிதி அமைப்பு பாரத் பந்த் அறிவித்து உள்ளது. இந்த பாரத் பந்த்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக பகுஜன் அமைப்புகள் பாரத் பந்த் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.

நாளை நடைபெற உள்ள பாரத் பந்தின்போது, சில பகுதிகளில்  வன்முறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் அச்சம் தெரிவித்து உள்ளனர். இதனால், அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றனர்.  குறிப்பாக மேற்கு உத்தரபிரதேசம் பகுதிகள் சென்சேஷனல் பகுதி என்று கருதப்படுவதால் அங்கு போலீசார் அதிக உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளனர். போராட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாரத் பந்த் நடைபெற்றாலும்,   ​​ஆம்புலன்ஸ்கள் போன்ற அவசர சேவைகள் செயல்படும். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.