விவசாயத்திற்காக பெறப்பட்ட மின் இணைப்பை வேறு பயன்பாட்டுக்கு உபயோகிப்பது குறித்த புகார்கள் அதிகரித்துள்ளதை அடுத்து விவசாய மின் இணைப்புகளை கணக்கெடுக்க வேளாண்துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் மின்சாரத்துறைக்கு வேளாண்மைத்துறை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், விவசாய நிலங்கள் குறைந்துவருவதாகவும் அந்த நிலங்கள் விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு விவசாயத்திற்காக பெறப்பட்ட இலவச மின் இணைப்பை வேறு பயன்பாட்டுக்கு உபயோகிப்பது குறித்து வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கணக்கெடுக்க தமிழக வேளாண்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு பணிகளை 10 நாட்களுக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அது அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.