டீ தூளில் பூச்சிக்கொல்லி இருப்பதை கண்டுபிடிக்க உதவும் உபகரணத்தை தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (The National Institute of Food Technology Entrepreneurship and Management – NIFTEM) உருவாக்கியுள்ளது.

ஹரியானா மாநிலம் குண்ட்லியில் உள்ள இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த உபகரணம் விரைவில் சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

பயோசென்சர் அடிப்படையிலான ரேபிட் கிட் சில நிமிடங்களில் தேயிலை மாதிரியில் பூச்சிக்கொல்லி இருப்பதை கண்டறிய உதவுகிறது என்று NIFTEM அதிகாரிகள் தெரிவித்தனர். Tata Consumer Products Ltd இந்த கிட்டின் வளர்ச்சிக்கு ஆதரவளித்துள்ளது.

30 முதல் 60 நிமிடங்களுக்குள், புதிய மற்றும் உலர்ந்த தேயிலை இலைகளில் குறிப்பிடத்தக்க பூச்சிக்கொல்லிகள் இருப்பதை இந்த கிட் மூலம் கண்டறிய முடியும் என்றபோதும் பூச்சிக்கொல்லியின் அளவு குறித்து இதில் அறியமுடியாது.

தேயிலை விவசாயிகள், தேயிலை பதப்படுத்துபவர்கள், உணவு வணிக உரிமையாளர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு தேயிலையில் முக்கிய பூச்சிக்கொல்லிகள் உள்ளதா என்பதை தீர்மானிக்க இந்த கருவி உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

குறைந்த விலையில் விரைவாக டீ தூளை பரிசோதனை செய்ய உதவும் இந்த கிட் செப்டம்பர் 19 முதல் 22 வரை இந்தியாவில் நடைபெற உள்ள உலக உணவு கருத்தரங்கின் போது வெளியிட மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதன் மதிப்பு ரூ. 300 என்று நிர்ணயிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.